SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் பென்குயின் பார்க்கச்சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த கதி!

9news
Source: Nine Network

1 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

கிறிஸ்மஸ் விடுமுறையின்போது விக்டோரியா - Phillip Island பகுதியில் பென்குயின் பார்ப்பதற்காக சென்று கடலில் மூழ்கி பலியான தனது கணவரினதும் மகனினதும் இழப்பிலிருந்து தன்னால் இப்போது மீள முடியாது என தனது கண் முன்னால் இரண்டு உயிர்களை காவுகொடுத்த இந்தியப்பெண்மணி தெரிவித்துள்ளார்.

தனது கணவரும் மகனும் போதையில் சென்று கடலில் வீழ்ந்து இறந்ததாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்ற வதந்திகள் குறித்து அவர் கடும் விசனமும் தெரிவித்துள்ளார்.

மெல்பேர்ன் Cranbourne பகுதியைச்சேர்ந்த சரன் (வயது 45) அவரது மனைவி நிஷி ஆகியோர் தங்களது பிள்ளைகள் ராகுல் (வயது 20) மற்றும் அனுஜ் (வயது 11) ஆகியோருடன் Phillip Island பிரதேசத்துக்கு பென்குயின்களை பார்ப்பதற்காக சென்றிருக்கிறார்கள்.

சென்று சேரவேண்டிய இடத்துக்கான பாதையை விட்டு விலகி இன்னொரு பாதையினால் சென்று கொண்டிருந்தபோது கடற்கரை காட்சிகளை கண்டு களிப்பதற்காக கரையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தகப்பனும் இரண்டு பிள்ளைகளும் அலைகளில் சென்று கால்களை நனைத்துள்ளார்கள். அப்போது திடீரென்று வந்த அலையொன்று மூவரையும் கடலுக்குள் இழுத்து சென்றிருக்கிறது.

கரையில் நின்றுகொண்டிருந்த நிஷா உதவிக்காக குரல் எழுப்பியபோதும் சரனும் மூத்த மகன் ராகுலும் கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டுவிட்டனர். அப்பகுதியால் சென்ற நபர் ஒருவரினால் இளைய மகன் மாத்திரம் அலைகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு கரைக்குக்கொண்டுவரப்பட்டார்.

இராணுவப்பயிற்சிக்கு சென்று நிறைவு செய்துவிட்டு, பொலீஸ் சேவையில் இணைந்துகொள்வதற்காக பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு காத்திருந்த ராகுலும் அவரது தந்தையாரும் இச்சம்பவத்தில் உயிரிழந்தார்கள்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now