மெல்பேர்னில் மருத்துவ பட்டம் பெறாமல் Gynaecologist-பெண் நோயியல் மருத்துவ நிபுணராக பணிபுரிந்து வந்த போலி மருத்துவருக்கு ஒன்பதரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
61 வயதான Raffaele Di Paolo என்ற நபர் மெல்பேர்னின் Brighton, St Kilda ஆகிய பகுதிகளில் உள்ள Clinic-களில் மருத்துவம் பார்த்துவந்தநிலையில், இவரது நடத்தைமீது எழுந்த முறைப்பாடுகளையடுத்து மோசடி, பாலியல் அத்துமீறல், அநாகரீகமான நடத்தை, ஏமாற்றிப் பணம் பறித்தல் என பல பிரிவுகளில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பில் நீண்ட நாட்களாக நடந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டபோது சுமார் 51 சம்பவங்களில் குற்றவாளி என இனங்காணப்பட்ட Di Paolo-க்கு ஒன்பதரை வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதில் ஆறரை வருடங்களைச் சிறையில் கழித்த பின்னரே அவர் பரோலில் வெளியே வருவதற்கு விண்ணப்பிக்க முடியும்.
Di Paolo ரஷ்யாவில் 1990களில் போலி மருத்துவச் சான்றிதழ்களைப் பெற்று பணிபுரிந்த குற்றத்திற்காக தண்டனைக்குள்ளாகியிருந்த போதிலும், அதே சான்றிதழ்களைப் பயன்படுத்தி ஆஸ்திரேலியாவிலும் அவர் மருத்துவம் பார்க்க ஆரம்பித்திருந்தார்.
தான் ஒரு சிறந்த பெண் நோயியல் நிபுணர் என்பதுடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவர் எனக் காட்டிக் கொண்ட Di Paolo-இன் போலி மருத்துவத்தில் சிக்கி 2005- 2015ம் ஆண்டுகளுக்கிடையில் சுமார் 30 பேர் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
