SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் தமிழ் இளைஞரை காரால் மோதிவிட்டு தப்பியோடியவர் பொலீஸில் சரண்!

Ajith
Judeland Antony suffered a broken pelvis and hand and serious spinal cord injury after being struck while crossing Bourke St on Tuesday. Source: Facebook

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மெல்பேர்ன் நகரில் கடந்த 29 ஆம் திகதி தமிழ் இளைஞர் ஒருவரை காரினால் மோதிவிட்டு தப்பியோடிய நபர் பொலீஸாரிடம் சரணடைந்துள்ளார்.

அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ள பொலீஸார் நீதிமன்றின் முன் ஆஜர் செய்த பின்னர் தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். அவர் பிணை அனுமதிக்கான கோரிக்கையை முன்வைக்கவில்லை என்று அவர் சார்பிலான சட்ட ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

கடந்த 29 ஆம் திகதி மெல்பேர்ன் நகரின் மத்தியில் விசேட தேவைக்கு உட்பட்ட தமிழ் இளைஞர் ஜூட் அன்டனி பாதசாரிகள் கடவையினால் தனது சக்கர நாற்காலியில் வீதியை கடந்து சென்றுகொண்டிருந்தபோது அவரை வாகனத்தினால் மோதிவிட்டு அதன் ஓட்டுனர் அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்றிருந்தார். சக்கர நாற்காலி தொலைதூரத்தில் சென்று விழ வாகனத்தினால் மோதுண்ட ஜூட் அன்டனி நடு வீதியில் தூக்கி வீசப்பட, அப்பகுதியில் நின்றவர்கள் ஓடிச்சென்று அவரை அம்புலன்ஸில் ஏற்றி வைத்தியசாலையில் சேர்த்திருந்தார்கள். பல எலும்பு முறிவுகளுடன் உயிர்தப்பிய ஜூட் அன்டனி தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலீஸார் மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை மாலை Melbourne North பொலீஸ் நிலையத்தில் குறிப்பிட்ட வாகன ஓட்டுனர் சரணடைந்துள்ளார். Altona North பகுதியை சேர்ந்த 23 வயதான இந்த நபர் பயிற்சி வாகனச்சாரதி பத்திரத்துடன் இன்னமும் வாகனம் ஓட்டக்கற்றுக்கொண்டிருப்பவர் என்றும், சம்பவம் இடம்பெற்ற அன்று வாடகை வாகனங்களை வழங்கும் RACV நிறுவனத்திடம் இன்னொருவரின் பெயர் விவரங்களைக்கொடுத்து - தவறான முறையில் - குறிப்பிட்ட நீல நிற வாகனத்தைப்பெற்றுக்கொண்டு ஓட்டி வரும்போதுதான் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து வாகனத்தை நிறுத்தாமல் சென்ற குறிப்பிட்ட நபர், தான் ஓட்டிச்சென்ற நீல நிற வாகனத்தை நூறு மீற்றர் தொலைவில் நிறுத்திவிட்டுச்சென்றுள்ளார். நேற்று திங்கட்கிழமை மாலை தனது சட்ட ஆலோசகருடன் பொலீஸில் சரணடைந்த குறிப்பிட்ட நபர் மீது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்த பொலீஸார் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர். அவர் மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றுக்கு கொண்டுவரப்படும்வரைக்கும் தற்போது பொலீஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இப்போதைக்கு, இவர் மீது சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து தப்பியோடியமை மற்றும் வீதிப்போக்குவரத்து விதிகளை மீறியமை ஆகியவை தொடர்பாக மாத்திரமே குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now