மெல்பேர்னில் பலஸ்தீன பின்னணி கொண்ட மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்போரில் கைது செய்யப்பட்ட நபர் நேற்றைய தினம் விக்டோரிய உச்ச நீதிமன்றில் விசாரணைக்கு முன்னிலைப்படுத்தப்பட்டபோது இரண்டு குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். ஆனால், முதலில் வல்லுறவுக்குற்றச்சாட்டினை மறுத்து தலை அசைத்ததன் மூலம் நீதிமன்றத்தில் பரபரப்பேற்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி மெல்பேர்ன் Bundoora பகுதியில் tram வண்டியில் வந்திறங்கி வீடு நோக்கி நடந்து சென்றுகொண்டிருந்த Aiia Maasarwe என்ற மாணவி, Codey Herrmann என்பவரால் அடித்து வீழ்த்தப்பட்டு பின்னர் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
மூன்று நாட்களின் பின்னர் கொலையாளி என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த 20 வயது நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் தடுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.
நேற்று புதன்கிழமை சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது - அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கான அமர்வாக அது ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்குரிய கேள்விகளை கேட்கும்போது முதலில் அவர் வல்லுறவு குற்றச்சாட்டு தொடர்பில் தலையை இரண்டு பக்கமும் அசைத்து செய்யவில்லை என்று கூறினார். இதனால் நீதிமன்றில் பரபரப்பு ஏற்பட்டது.அவர் தரப்பு சட்டத்தரணியும் குழம்பிப்போனார்.
ஆனால், சட்டத்தரணி உடனடியாக எழுந்து சென்று சந்தேக நபருடன் பேசி - கேள்வியை மீண்டும் விளங்கப்படுத்திய பின்னர், சந்தேக நபர் இரண்டு குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். வழக்கில் பல ஆவணங்கள் கிடைக்கப்பெறவேண்டியிருப்பதாக சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கூறியுள்ளார். வழக்கு தொடர்பான அடுத்த நீதிமன்ற அமர்வு எதிர்வரும் ஒக்டோர் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
Share
