மெல்பேர்ன் Bundoora பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் பலஸ்தீன மாணவி Aiia Maasarwe-ஐ பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த Codey Herrmann-க்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்வு குற்றத்திற்காக 12 ஆண்டுகளும், கொலைக்குற்றத்திற்காக 32 ஆண்டுகளும் உட்பட சுமார் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாகத் தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி Elizabeth Hollingworth ஆகக்குறைந்தது 30 ஆண்டுகளை சிறையில் கழித்த பின்னரே பரோலில் வெளியே வருவதற்கு விண்ணப்பிக்க முடியும் என குறிப்பிட்டார்.
குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று பிற்பகல் 5.30 மணியளவில் வழங்கப்பட்டது.
இன்றைய நீதிமன்ற அமர்வில் Aiia Maasarwe-இன் தந்தை மற்றும் சகோதரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
Codey Herrmann கொலைக்குற்றச்சாட்டினை முன்னதாக ஒப்புக்கொண்டதை அடுத்து சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் நடைபெற்றிருந்தன.
கொலைச்சம்பவம் தொடர்பாக பொலீஸார் முன்வைத்த அறிக்கையின்படி - சம்பவம் இடம்பெற்ற அன்று - ஜனவரி 16 ஆம் திகதி Aiia Maasarwe, Bundoora பகுதியில் Tram வண்டியைவிட்டு இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும்போது தனியாக இருட்டில் நடந்து செல்வதற்கு பயத்தில் தனது சகோதரிக்கு தொலைபேசி மூலம் அழைப்பெடுத்திருக்கிறார். அந்த அழைப்பு இணைக்கப்பட்டு சில நொடிகளிலேயே அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த Codey Herrmann அவரது தலையில் இரும்பு கம்பியினால் தாக்கியுள்ளார். அப்போது "you piece of s**t" என்று Aiia Maasarwe அரபு மொழியில் திட்டியது தொலைபேசியின் மறுமுனையில் கேட்டிருக்கிறது. அந்த தாக்குதலுக்கு பின்னர், Aiia Maasarwe அருகிலிருந்த பற்றைகளுக்கு இடையில் இழுத்துச்செல்லப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன் பின்னர் மீண்டும் பல தடவைகள் தலையில் இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டுள்ளார். Codey Herrmann தன்னிடமிருந்த திரவமொன்றை ஊற்றி உடலத்தை எரிக்கமுற்பட்டதும் தடயங்களில் தெரியவந்துள்ளது என்று குறிப்பிடப்படுகிறது.
அதேநேரம் Codey Herrmann-இன் வழக்கறிஞர் கூறும்போது - செய்த குற்றத்தை ஒருபோதும் நியாயப்படுத்தமுடியாது என்றபோதிலும், இந்தச்செயல் அவரது இயல்பான பழக்கத்திற்கு முற்றிலும் முரணானது என்றும் தெரிவித்தார். Codey Herrmann சிறுவயதிலிருந்து இடர்மிகுந்த வளர்ப்பின் வழி வந்ததும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையாகியிருந்ததும் இந்த குற்றத்துக்கு காரணமாகியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
