மெல்பேர்ன் Bourke வீதியில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் அப்பாவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி பலியானார். தாக்குதல் நடத்தியவர் பொலீஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் உயிரிழந்திருந்தார்.
வாரவிடுமுறை கடந்து இன்று திங்கட்கிழமை மெல்பேர்ன் நகர் வழமையான பணிகளுக்கு திரும்பினாலும் வெள்ளியன்று இடம்பெற்ற சம்பவத்தின் அதிர்வுகள் தொடர்ந்தவண்ணமே உள்ளன.
வெள்ளியன்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பான சில தகவல்கள் -
-சம்பவத்தில் உயிரிழந்த Sisto Malaspina (74 வயது) Bourke வீதியில் அன்றைய தினம் தனது வாகனத்தைக்கொண்டுவந்து மோதி வெடிக்க வைத்த நபருக்கு உதவி செய்வதற்காக சென்றவர் ஆவார். வெடித்து எரிந்துகொண்டிருந்த வாகனத்தை அணைப்பதற்கு ஓடிச்சென்று உதவப்போனபோது வெடிக்க வைத்தநபரினால் கத்தியால் குத்தப்பட்டு பலியானார். இத்தாலியை பூர்வீகமாகக்கொண்ட இவர் 1976 ஆம் ஆண்டு முதல் Bourke வீதியில் தேநீரகம் ஒன்றை நடத்திவருகிறார். முன்னாள் பிரதமர்கள் திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட பலர் வந்து சென்ற தேநீரகம் இது.
-தாக்குதலாளி பொதுமக்கள் மீதும் பொலீஸார் மீதும் தாக்குதல்களை நடத்த தொடங்கியபோது அவரை தடுப்பதற்கு தெருவில் நின்றுகொண்டிருந்த trolley-தள்ளுவண்டியொன்றை பயன்படுத்தியவர் மெல்பேர்ன் நகர தெருக்களில் வசித்து வந்த வீடற்றவர் ஆவார். அவரது துணிகரமான செயலை நாடே பாராட்டி அவருக்கு பொதுமக்கள் பண உதவிகளை அள்ளி வழங்கி வருகிறார்கள். இதுவரைக்கும் அவருக்கு 100 ஆயிரம் டொலர்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தாக்குதலை நடத்திய நபர் தீவிரவாத குழு ஒன்றுடன் இணைந்துகொள்ளும் சாத்தியமுள்ளதாக சந்தேகித்த ஆஸ்திரேலிய பொலீஸார் அவரது ஆஸ்திரேலிய கடவுச்சீட்டை மீளப்பெற்றிருந்தனர். அத்துடன் குறிப்பிட்ட நபர் சில காலமாக பயங்கரமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் தன்னை யாரோ சிலர் வாளோடு துரத்துவதாக கூறிக்கொண்டேயிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சம்பவம் இடம்பெற்ற அன்று தாக்குதலாளியை அவரது மார்பில் ஒரே தடவையில் சுட்டுக்கொன்றவர் பொலீஸ் சேவையில் மூன்று மாதங்களுக்கு முன்னரே பயிற்சி முடித்து களப்பணிக்கு இறக்கப்பட்டிருந்தார். இவரது பணியை விக்டோரிய Premier Daniel Andrews முதல் அனைவரும் பாராட்டியுள்ளனர்.
