மெல்பேர்னில் நேற்று நிலவிய சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட சுவாசப்பிரச்சினை காரணமாக இருவர் பலியாகிய அதேநேரம் 200 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அத்துடன் பிற்பகல் 6 மணி முதல் இரவு 11 மணிவரையிலான காலப்பகுதிக்குள் அவசரசேவைப் பிரிவுக்கு இரண்டாயிரம் தொலைபேசி அழைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
மெல்பேர்னில் பெய்த இடியுடன் கூடிய மழை மற்றும் புயற்காற்றால் உருவாகிய "Thunderstorm asthma"-வே நேற்றிரவு ஏற்பட்ட சுவாசப்பிரச்சினைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் இது தொடர்பில் விரிவான விசாரணைகள் நடைபெறுவதாகவும் விக்டோரியா மாநில சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
"Thunderstorm asthma" என்பது புயல் மற்றும் மழை காரணமாக Pollen எனப்படும் பூந்தாதுக்கள் மிகச்சிறு துணிக்கைகளாக உடைக்கப்பட்டு வளிமண்டலத்தில் பரவி, மூக்கு வழியாக நுரையீரலுக்குள் செல்வதால் ஏற்படும் சுவாசப்பிரச்சினையாகும்.
இந்த 'Thunderstorm asthma" ஏற்கனவே hayfever, மற்றும் pollen ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் தாக்குகின்ற ஒன்று என்ற போதிலும், சாதாரணமாக ஆஸ்துமா ஏற்படாத ஒருவரையும் இது தாக்கக்கூடும்.
மெல்பேர்னில் முதன்முதலாக 1987ம் ஆண்டு "Thunderstorm asthma" சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் பின்னர் 2010ம் ஆண்டும் ஏற்பட்டிருந்தது.
அதைத்தொடர்ந்து 6 வருடங்கள் கழித்து மீண்டும் "Thunderstorm asthma" மெல்பேர்னைத் தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share
