வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மெல்பேர்ன் மருத்துவமனை ஒன்றிலிருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
Epworth Hawthorn தனியார் மருத்துவமனையில் இன்று காலை இச்சம்பவம் இடம்பெற்றது.
இன்று காலை 8 மணியளவில் தொலைபேசியூடாக குறித்த மருத்துவமனைக்கு இரண்டு தடவைகள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் இதையடுத்து உடனடியாக பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டதாகவும் Epworth Hawthorn பேச்சாளர் தெரிவித்தார்.
வெடிகுண்டு மிரட்டல்களையடுத்து மருத்துவமனையிலிருந்த சுமார் 60 நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக அருகிலிருந்த பூங்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சுமார் 2 மணிநேரமாக மேற்கொள்ளப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மீண்டும் மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் விஷமிகளால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனத் தெரிவித்துள்ள பொலிஸார் வெடிகுண்டு புரளி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
