மெல்பேர்ன் விமானநிலையத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை இனிவரும் ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ள பின்னணியில், விமான நிலையத்தை விரிவாக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
புதிய domestic terminal மற்றும் விமான ஓடுபாதை அமைத்தல் அத்துடன் ஏற்கனவே இருக்கும் terminal-களை விரிவாக்குதல் என பல புதிய திட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
மெல்பேர்ன் விமானநிலையத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 35 மில்லியனாக தற்போது காணப்படும் நிலையில், இது எதிர்வரும் 2037-38ம் ஆண்டுகளில் 68 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதேகாலப்பகுதியில் விமானநிலையத்திற்கு வந்துபோகும் கார்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 127,000 இலிருந்து 240,000 ஆக அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்தப்பின்னணியில் அதிகரிக்கும் மக்கள் கூட்டத்திற்கேற்ப விமானநிலையத்தை விரிவுபடுத்துவது அவசியமாவதாக மெல்பேர்ன் விமான நிலைய தலைமை நிர்வாகி Lyell Strambi தெரிவித்தார்.
மேம்படுத்தல் பணிகளின் முதற்கட்டமாக அடுத்த 12 மாதங்களுக்குள் விமானநிலையத்தின் பல பகுதிகளில் பயணிகளை விரைவாக நகரச் செய்வதற்கு உதவும் moving walkways/travellators அமைக்கப்படவுள்ளதாகவும் ஏனைய விரிவாக்கல் பணிகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
