அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா வந்துகொண்டிருந்த Qantas விமானத்தில் கைத்தொலைபேசியொன்றிலிருந்து புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டு அது பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அறியவருகிறது.
அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸிலிருந்து மெல்பேர்ன் விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொகுசுப்பயண வசதிகொண்ட பகுதியில் (Business class) பயணியொருவர் இரண்டு இருக்கைகளுக்கு இடையில் தனது கைத்தொலைபேசியை தவறுதலாக வீழ்த்திவிட்டார் என்றும், அதனை எடுப்பதற்கு முயற்சித்தபோது அந்த தொலைபேசி மேலும் அசைந்து சென்று இருக்கைகளுக்கு இடையில் சிக்கி நசிந்து நொருங்கி அதிலிருந்து சிறு புகை கிளம்பியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச்சம்பவத்தை கண்ட விமான பணியாளர்களில் இருவர் உடனடியாக தீயணைப்பு கருவிகளை தூக்கிக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். இதனால் பயணிகள் பீதியடைந்துள்ளார்கள். இந்த நிலமை உடனடியாகவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக Qantas பேச்சாளர் தெரிவித்தார்.
அமெரிக்காவிலிருந்து வந்துகொண்டிருந்த விமானம் மெல்பேர்ன் விமான நிலையத்தில் தரைதட்டுவதற்கு இரண்டு மணிநேரங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
