SKIP TO MAIN CONTENT

முன்று ஆண்டுகளா? ஆறு ஆண்டுகளா?

எந்த செனட்டர் எத்தனை வருடங்கள் என்பதை யார் முடிவெடுப்பர்?

Senate Term

2 min read

Published

By Kulasegaram Sanchayan


Skip to article content

கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் இந்தக் கட்டுரை எழுதப்பட்ட நேரம் முடிவாகவில்லை... செனட் சபைக்கு யார் தெரிவாகியிருக்கிறார்கள் என்ற முழு விபரங்களும் இன்னமும் வெளியாகவில்லை.

வழக்கமாக, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் தேர்தலில் செனட்சபையில் அங்கத்துவம் வகிப்பவர்களில் பாதிப்பேர் தேர்தலில் போட்டியிடுவார்கள்.  ஆனால், இரட்டைக் கலைப்பு (double dissolution) முலம் நடந்த கடந்த வாரத் தேர்தலில், அனைத்து செனட் ஆசனங்களும் காலியாக்கப்பட்டு, அனைவரும் புதிதாக தெரிந்தெடுக்கப்பட வேண்டியவர்களாயிற்று.  இந்நிலையில், யார் ஆறு வருடங்கள் செனட்டர்களாக இருப்பார்கள், யாருடைய பதவி மூன்று வருடங்களிலேயே காலாவதியாகும் என்ற கேள்வி எழுகிறது இல்லையா?

இந்தக் கட்டுரையில், அந்த முடிவு எப்படி எடுக்கப்படும் என்ற விளக்கத்தைத் தருகிறோம்.

வழமையாக, மாநிலங்களிலிருந்து செனட் சபைக்குத் தெரிவாகுபவர்கள் ஆறு வருடங்களுக்கு செனட்டர்களாகக் கடமையாற்றுவர்.  ACT மற்றும் NT பிரதேசங்களிலிருந்து தெரிவாகுபவர்களது கடமைக்காலம் மூன்று வருடங்கள் மட்டுமே.

ஆக, ஒவ்வொரு தேர்தலின் பின்னும் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 36 செனட்டர்கள், அதிலிருந்து ஆறு வருடங்களும், ஏற்கனவே மூன்று வருடங்கள் கடமையாற்றிய 36 செனட்டர்கள், அதிலிருந்து மூன்று வருடங்களும், ACT மற்றும் NT பிரதேசங்களிலிருந்து புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 4 செனட்டர்கள், அதிலிருந்து மூன்று வருடங்களும் பணியாற்றுவர். 

ஆனால், இந்தத் தேர்தலில் 76 செனட்டர்கள் தெரிவாக இருக்கிறார்கள். 

வழமையான தேர்தலில் மொத்தமாக மக்கள் வழங்கிய வாக்குகளில் ஒன்றில் ஏழு வாக்கைப் பெற்றவர் செனட்சபைக்குத் தேர்வாகுவார்.  அதாவது, 14.29 சதவீதமான வாக்குகளை ஒருவர் பெறுவதன் மூலம் தான் செனட்சபைக்குத் தெரிவாக முடியும்.  ஆனால் இரட்டைக்கலைப்பினால் நடைபெற்ற இந்தத் தேர்தலில் செனட்சபைக்குத் தெரிவாக, ஒருவர் ஒன்றில் பதின்நான்கு, அதாவது 7.69 சதவீதமான வாக்குகளைப் பெற்றால் போதுமானதாகும்.

சரி, இந்தத் தேர்தலில், மாநிலத்திலிருந்து தெரிவாகும் செனட்டர் ஒருவர் மூன்று வருடங்களா அல்லது ஆறு வருடங்களா கடமையாற்றுவது என்ற முடிவை எப்படி எடுப்பது?

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன

மறுவாக்கு எண்ணிக்கை முறை (recount method) அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட ஒழுங்கு முறை (order elected)

மறுவாக்கு எண்ணிக்கை முறை (recount method)

ஆஸ்திரேலிய தேர்தல் சட்டத்தில், 1984ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாற்றத்தின்படி, இரட்டைக்கலைப்பு நடந்தால், செனட் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும், ஆனால் செனட்சபை இந்த முறை@யுத்தான் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்று சொல்கிறது.  இதன்படி, 14.29 சதவீத வாக்குகளைப்பெற்ற அனைத்து செனட்டர்களும் ஆறு வருடம் பணியிலிருக்க முடியும்.  மற்றவர்கள் எல்லோருடைய பணிக்காலமும் மூன்று வருடங்களுடன் முடிந்துவிடும்.

ஒப்பீட்டளவில், சிறுகட்சி உறுப்பனர்கள் குறைந்த வாக்குகளுடன் செனட்சபைக்குத் தெரிவாகியிருப்பார்கள் என்பதால், இந்த முறையைப் பயன்படுத்துவது Labor கட்சிக்கும் Coalition கட்சிகளுக்கும் அநுகூலமாக அமையும்.  எனவே, அவர்கள் இந்த முறையைப் பயன்படுத்தவே விரும்புவார்கள் என்று பரவலாகக் கருதப்படுகிறது.

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒழுங்கு முறை (order elected)

சட்டத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் கடந்த காலங்களில் இரட்டைக்கலைப்புக்குப் பின் நடந்த தேர்தல்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒழுங்கு முறையைப் பயன்படுத்தவே செனட்சபையினர் விருப்பம் காட்டியிருக்கிறார்கள்.

இந்த முறையின்படி, வாக்கெடுப்பு முடிந்து வாக்குகள் எண்ணப்படும்போது முதலில் 7.69 சதவீதமான வாக்குகளைப் பெற்றவர்கள் ஆறுவருடம் பணியாற்றும் தகமையைப் பெறுவார்கள்.  வழமையாக வாக்குகள் எண்ணி முடிந்தபின், இரண்டாம் சுற்றில் விருப்பு வாக்குகள் பிரதான கட்சிகளுக்குப் பிரித்து வழங்கப்படும்.  தேர்ந்தெடுக்கப்பட்ட ஒழுங்கு முறை மூலம் செனட்டர்களின் பதவிக்காலத்தைத் தீர்மானிக்கும் போது, அந்த விருப்பு வாக்குளின் தாக்கம் இல்லாமல் போகிறது.

1998 மற்றும் 2010ம் ஆண்டுகளில், இரட்டைக் கலைப்பைத் தொடர்ந்து, மறுவாக்கு எண்ணிக்கை முறையைத் தாம் விரும்புவதாக செனட்சபை வாக்களித்திருந்தமை நினைவு கூரத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now