மூன்று நாட்கள் விடுப்பெடுத்துக்கொண்டால் பத்து நாட்களைக்கொண்ட விடுமுறை கிடைக்கக்கூடிய வகையில் ஏப்ரல் இறுதியில் வருகின்ற வாய்ப்பானது அபூர்வமானது என்றும் பல வருடங்களுக்கு ஒரு தடவை ஏற்படுவது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஏப்ரல் மாதம் வருகின்ற ஈஸ்டர் விடுறையுடன் அன்சாக் தின விடுறையும் நெருக்கமாக வருகின்றமை அனைவரும் அறிந்ததே. ஆக, திங்கள் முதல் வெள்ளிவரை வேலைசெய்கின்ற சாதாரண வேலையாட்கள் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதிக்கும் 28 ஆம் திகதிக்கும் இடையில் ஏப்ரல் 23, 24 மற்றும் 26 ஆம் திகதிகளில் மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டால், அவர்களுக்கு பத்து நாட்களுடன்கூடிய நீண்ட விடுமுறை கிடைக்கக்கூடிய வகையில் மேற்படி விடுமுறை தினங்கள் இம்முறை வந்திருக்கின்றன.
இது கடைசியாக 2014 ஆம் ஆண்டு இடம்பெற்றது என்றும் மீண்டும் இவ்வாறான விடுமுறை கிடைக்கக்கூடிய வாய்ப்பு 2025 ஆம் ஆண்டிலேயே வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பத்து நாட்களுக்கு வேலைத்தளங்களை மூடுவது குறிப்பிட்ட சில தொழில்துறைகளுக்கு நட்டத்தை ஏற்படுத்தும் என்றும் அந்தத்துறை சார்ந்தவர்கள் தங்களது வேலையாட்களுக்கு விடுப்பு வழங்குவதில்லை என்று உறுதியோடிருக்கிறார்கள் என்றும் தொழிற்சங்க வட்டாரங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
இலக்குவைத்து வேலைகளை முடித்துக்கொடுக்கவேண்டிய கட்டட பணிகள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான வேலைகளை பத்து நாட்களுக்கு இழுத்து மூடுவது மிகப்பெரிய நட்டத்தை ஏற்படுத்திவிடக்கூடியது என்றும் அவ்வாறான ஒரு பொறிமுறையை ஆதரிக்கமுடியாது என்றும் குறிப்பிட்ட தொழிற்துறையை சார்ந்த வேலை வழங்குனர்கள் கூறியுள்ளனர்.