பிரதமர் Malcolm Turnbull- இன் தலைமைத்துவத்திற்கு இரண்டாவது தடவையாக சவால் விடுக்கவுள்ளதாக முன்னாள் உள்துறை அமைச்சர் Peter Dutton அறிவித்துள்ளார்.
பிரதமர் Malcolm Turnbull- க்கும் Peter Dutton-க்கும் இடையில் நடைபெற்ற முதலாவது தலைமைத்துவப் போட்டியில் Turnbull 13 வாக்குகளால் வெற்றிபெற்றிருந்த போதிலும், தற்போது முக்கிய அமைச்சர்கள் பலர் தமது ஆதரவை மீளப்பெற்றுள்ளதால் பிரதமர் மீண்டும் இப்போட்டியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிவிக்கப்படுகிறது.
National Energy Guarantee என்ற தேசிய எரிசக்தி உத்தரவாத திட்டத்தில் ஆளுங்கட்சி அங்கத்தவர்களின் ஒருமித்த ஆரதவைப்பெறுவதில் Malcolm Turnbull தோல்விடைந்திருந்தநிலையில், அவரது தலைமைத்துவத்திற்கு Peter Dutton சவால் விடுத்து அதில் தோல்விகண்டிருந்தார்.
தலைமைத்துவ சவாலில் தோல்வியடைந்ததையடுத்து தனது உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த Peter Dutton, சாதாரண backbench நாடாளுமன்ற உறுப்பினராக கடமையாற்றவுள்ளதாக அறிவித்திருந்தார்.
இந்தப் பின்னணியில் இன்று காலை பிரதமரைத் தொடர்புகொண்டு பேசிய Peter Dutton, தான் மீண்டும் தலைமைத்துவ சவாலை முன்வைக்கவுள்ளதாகவும், வாக்கெடுப்பு நடத்துவதற்காக கட்சியின் உயர்மட்டக்கூட்டத்தைக் கூட்டவேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்துள்ளார்.
இரண்டாவது தலைமைத்துவ சவாலில் வெற்றிபெறுவதற்குத் தேவையான வாக்குகளைப்பெற முடியும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக Peter Dutton தெரிவித்துள்ளார்.
இதேவேளை Mathias Cormann, Michaelia Cash, Mitch Fifield ஆகிய 3 முக்கிய அமைச்சர்கள் பதவிவிலகலை அறிவித்துள்ள அதேநேரம் Peter Dutton-க்கான தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதுடன், பிரதமருக்கு கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு இல்லை என அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இன்றையதினம் பிரதமர் Malcolm Turnbull-க்கும் Peter Dutton-க்கும் இடையில் தலைமைத்துவ போட்டி நடைபெறும்பட்சத்தில், பிரதமர் Turnbull அதில் தோல்வியடைந்து பதவி இழக்கும் நிலை ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
