இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பிரதேசத்துக்கு சென்று செய்தி சேகரித்துவிட்டு வரும் வழியில் இராணுவத்தின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்காகி தனது ஒரு கண்ணை இழந்தவரும் புகழ்பூத்த சர்வதேச பத்திரிகையாளருமான மேரி கொல்வினை படுகொலை செய்தமைக்கு நட்ட ஈடாக அவரது குடும்பத்துக்கு 302.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை (AU$415 மில்லியன்) வழங்குமாறு சிரிய அரசுக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தனது சகோதரி படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்கவேண்டும் என்று மேரி கொல்வினின் சகோதரி கத்தரின் கொல்வின் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் மீதான தீர்ப்பை வழங்கிய நீதிபதி மேற்படி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.
இந்த வழக்கில் நீதிமன்றில் எதிர்த்தரப்பில் வாக்குமூலம் வழங்கிய சிரியாவின் முன்னாள் புலனாய்வு உ த்தியோகத்தர், ஆட்லறி தாக்குதல் மூலம் மேரி கொல்வின் தங்கியிருந்த இடம் தாக்கியழிக்கப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்ட செய்தி உறுதி செய்யப்பட்டபின்னர் அந்த சம்பவம் சிரிய படையினரால் கொண்டாடப்பட்டதாக கூறினார்.
மேரி கொல்வின் படுகொலை தொடர்பாக முன்னர் அசாத் தலைமையிலான சிரியா அரசுத்தரப்பில் கருத்து வெளியிடப்பட்டபோது - மேரி கொல்வின் சட்டவிரோதமாக சிரியாவுக்குள் வந்து பயங்கரவாதிகளுடன் இணைந்து செயற்பட்டார். பயங்கரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போரின் இடையில் சிக்குண்டு அவர் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவை அனைத்தையும் தனது தீர்ப்பில் பரீசிலித்த அமெரிக்காவின் கொலம்பிய நீதிமன்ற நீதிபதி Amy Berman Jackson - மேரி கொல்வினுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருப்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற படுகொலை. இந்தக்குற்றத்துக்கு சிரியாவின் அசாத் அரசாங்கம் பொறுப்பேற்று மேரி கொல்வின் மற்றும் அவரோடு உயிரழந்த பிரான்ஸ் புகைப்படப்பிடிப்பாளர் ஆகியோருக்கு 302.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
சிரியாவின் அசாத் அரசு மேற்கொண்டதாக கூறப்படும் போர்க்குற்றத்துக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள முதலாவது நீதிமன்ற தீர்ப்பு இதுவாகும்.
2012 ஆம் ஆண்டு பெப்ரவரி 22 ஆம் திகதி சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட அரச படைகளில் தாக்குதலில் மேரி கொல்வின் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு வயது 56. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப்போரின்போது விடுலைப்புலிகளின் சில உறுப்பினர்கள் சரணடைவதற்காக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு மேரி கொல்வின் ஊடாகவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்கள் என்பதும் அவர் அதனை கட்டுரையாக எழுதி இறுதிக்கட்டப்போரின் தனது சாட்சியமாக பதிவுசெய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேரி கொல்வினின் வாழ்கை சரிதம் The Private War என்று படமாக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் Golden Globe விருதுக்கு தற்போது அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது.
