தங்களுக்குரிய தரகுக்கூலிகளிலும் ஊக்குவிப்பு பணத்திலும் மாத்திரம் கவனம் செலுத்திக்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு உரிய சேவையை வழங்கத்தவறிய சுமார் 300 உத்தியோகத்தர்களை National Australia Bank (NAB) வேலையிலிருந்து நீக்கியுள்ளது.
வங்கிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் Royal Commission விசாரணைகளை அடுத்து NAB தனது உள்ளக விசாரணைகளை மேற்கொண்டதன் விளைவாக கண்டறியப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக NAB நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Royal Commission விசாரணைகளில் முன்னிலையாகி தனது நிறுவனம் தொடர்பாக கருத்து தெரிவித்த Chief executive Andrew Thorburn - வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டிய சேவைகளை தமது வங்கி வழங்குவதற்கு தவறியிருப்பதாகவும் தான் அதற்கு மன்னிப்புக்கோருவதாகவும் கூறினார்.
விசாரணைகைளை அடுத்து தமது வங்கி நிர்வாகம் மேற்கொண்ட உள்ளக விசாரணைகளில் சுமார் 1200 உத்தியோகத்தர்கள் வங்கி ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பான கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார்கள். இவர்களில் 700 பேருக்கு ஊதியம் மற்றும் ஊக்குவிப்பு பணம் வழங்குவது குறைக்கப்பட்டிருப்பதாகவும் பாரதூரமான ஒழுங்குமீறல்களில் ஈடுபட்ட 300 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் Andrew Thorburn தெரிவித்துள்ளார்.
இப்படியான உத்தியோகத்தர்களின் முறைகேட்டினால் வங்கி வாடிக்கையாளர்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள். அதற்கு அவர்கள் தகுதியுடையவர்களே அல்லர் என்றும் Andrew Thorburn கூறியுள்ளார்.
