தினமும் அஸ்பிறின்(Aspirin) மாத்திரை உட்கொள்வதன் மூலம் மரணத்தையும் மாரடைப்பையும் தவிர்த்துக்கொள்ளலாம் என்றும், முதியவர்களின் ஆரோக்கியத்துக்கு அஸ்பிறின் மாத்திரை இன்றியமையாதது என்றும் கூறப்பட்டு வந்த மருத்துவ ஆலோசனை முற்றிலும் தவறானது என்று ஆஸ்திரேலிய - அமெரிக்க கூட்டு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஐந்தாண்டு காலமாக ஆஸ்திரேலிய - அமெரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 19 ஆயிரம் முதியவர்களுக்கு மத்தியில் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இந்த அறிவிப்பினை ஆராய்ச்சியாளர்கள் விடுத்துள்ளனர்.
70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 16,703 ஆஸ்திரேலியர்களும் 2411 அமெரிக்கர்களும் இந்த ஆய்வுக்காக பயன்படுத்தப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் இரண்டு தடவைகள் அஸ்பிறின் மாத்திரை கொடுக்கப்பட்டு இவர்களது உடல்நிலை மற்றும் ஆரோக்கியம் குறித்த உன்னிப்பான மருத்தவ அவதானங்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன.
கடந்த ஐந்து வருடங்களாக மேற்கொண்ட இந்த ஆய்வின் பிரகாரம், அஸ்பிறின் மாத்திரை உட்கொள்பவர்களுக்கு உட் சுரப்பிகளில் இரத்தம் வெளிவருவது அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், அஸ்பிறின் மாத்திரை உட்கொள்ளாதவர்களுடன் ஒப்பிடும்போது தினமும் அஸ்பிறின் உட்கொள்பவர்களின் இறப்பு வீதமும் கூடுதலாக உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு தொடர்பாக கருத்து தெரிவித்த பேராசிரியர் McNeil மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் அறிகுறிகள் இனங்காணப்பட்டு முன்னெச்செரிக்கையாக அஸ்பிறின் மாத்திரை உட்கொள்ளுமாறு ஏற்கனவே மருத்துவர்களால் ஆலோசனை வழங்கப்பட்டவர்கள் குறித்து இந்த ஆய்வு எந்த கருத்தையும் முன்வைக்கவில்லை. தற்போது மேற்கொண்டுள்ள ஆய்வானது எந்த நோயும் இல்லாமல், தினமும் அஸ்பிறின் உட்கொண்டு வருபவர்கள் குறித்தது மாத்திரமே என்று கூறியுள்ளார்.
