இஸ்லாமிய சட்டங்களுக்கு ஆதரவளிக்கும் பெண்ணியவாதிகளின் பிறப்புறப்பு சிதைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும் ஆஸ்திரேலியாவுக்குள் முஸ்லிம்களின் வருகை தடை செய்யப்படவேண்டும் என்று சமூகவலைத்தளங்களில் எழுதினார் என்று கூறப்பட்ட சர்ச்சைகளை அடுத்து லிபரல் கட்சியில் டஸ்மேனிய வேட்பாளர் Jessica Whelan தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளார்.
இந்த விவகாரம் நேற்றைய தினம் பெரும் சர்ச்சையாக கிளம்பியதை அடுத்து பிரதமர் Scott Morrison கருத்து தெரிவிக்கும்போது - சமூக வலைத்தளங்களில் Jessica Whelan தெரிவித்த கருத்து திரிபுபடுத்தப்பட்டுள்ளது என்றும் அது குறித்து பொலீஸாரிடம் முறையிடப்படவுள்ளது என்று கூறியிருந்தார்.
ஆனால், Jessica Whelan சமூக வலைத்தளங்களில் கருத்துக்கூறியதற்கான ஆதாரங்கள் நேற்றிரவு வெளியாகியதையடுத்து, இன்று காலை அவர் போட்டியிலிருந்து விலகியுள்ளார். அவரது விலகலை லிபரல் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளதாக கட்சித்தலைமை அறிவித்துள்ளது.
லிபரல் கட்சியின் சமூக வலைத்தளங்களிலும் வேறு இடங்களிலும் தொடர்ச்சியாக முஸ்லிம் எதிர்ப்புக்கருத்துக்களை Jessica Whelan வெளியிட்டு வந்துள்ளமை இன்னும் பல ஆதாரங்களுடன் இப்போது ஊடகங்களில் வெளியாகிய வண்ணமுள்ளன.
இதுகுறித்து, லிபரல் கட்சி மேலும் தெரிவித்தபோது - தங்களது வேட்பாளரது இந்த கருத்துக்கள் பொருத்தமில்லாதது என்றும் தங்களது பார்வைக்கு கொண்டுவரும்வரைக்கும் தமக்கெதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளது.
சமூகவலைத்தளத்தில் இனவாத கருத்துக்களை தெரிவித்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் எதிர்வரும் தேர்தலில் இருந்து விலகும் மூன்றாவது லிபரல் வேட்பாளர் இவர் என்பது குறிப்பிடத்க்கது.
