SKIP TO MAIN CONTENT

மாட்டிறைச்சி விவகாரம்:பல்பொருள் அங்காடியிடம் விநோதமாக நஷ்டஈடு கோரும் இந்தியர்!

SCOTT HAMMOND/STUFF
Source: SCOTT HAMMOND/STUFF

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

ஆட்டு இறைச்சி என்ற பெயரில் பொதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சியை தனக்கு விற்பனை செய்த Countdown(Woolworths) பல்பொருள் அங்காடியின் கவனக்குறைவினால் தான் மாட்டு இறைச்சியை உட்கொண்டு தனது மதத்திற்கும் தனது புனிதத்தன்மைக்கும் கேடு விளைவித்துவிட்டதாக கடுங்கோபம் கொண்டுள்ள இந்தியர் ஒருவர், குறிப்பிட்ட பல்பொருள் அங்காடியிடம் நஷ்ட ஈடு கோரியுள்ளதாக Stuff.co.nz செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, ஆட்டு இறைச்சி என்ற பெயரில் பொதி செய்யப்பட்ட மாட்டு இறைச்சியை உட்கொண்டதால் தனது உடலில் ஏற்பட்டுள்ள அழுக்கினை நீக்கி மத ரீதியான உடற் சுத்திகரிப்பினை சாமியார்களின் ஊடாக மேற்கொள்வதற்கு இந்தியா செல்வதற்கு விமானப்பயண சீட்டு மற்றும் அந்த காலப்பகுதியில் தான் வேலையில் விடுப்பெடுக்கப்போவதால் ஏற்படப்போகும் தொழில் நஷ்டம் ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட பல்பொருள் அங்காடியிடம் நஷ்ட ஈடு கோரியுள்ளார்.

இந்தச்சம்பவம் நியூஸிலாந்து நகரின் Blenheim பகுதியில் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் இடம்பெற்றுள்ளது.

குறிப்பிட்ட இந்தியரிடம் Countdown நிறுவனம் மன்னிப்புக்கோரி, அன்றையதினம் தவறாக பொதி செய்யப்பட்ட காரணத்தினால், ஆட்டு இறைச்சிப்பொதியில் மாட்டு இறைச்சி பொதி செய்யப்பட்டுவிட்டது என்று தவறை ஒப்புக்கொண்டுள்ளது. அவருக்கு $200 Gift card ஒன்றையும் இனாமாக கொடுத்திருக்கிறது. அதனை வாங்க மறுத்த இந்தியர் திரும்பிச்சென்றுவிட்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி மீண்டும் Countdown அங்காடிக்குச்சென்றுள்ள இந்நபர் - Countdown தனக்கு இழைத்த தவறை மன்னிப்பு என்ற வார்த்தையினால் சரிசெய்துவிடமுடியாது என்றும் இந்த விடயம் அங்காடியினருக்கு சின்ன விடயமாக இருக்கலாம், ஆனால், இந்து மதத்தினை பின்பற்றுகிறவர்களுக்கு மிகப்பெரிய விடயம் என்றும் கூறியுள்ளார்.

தான் மாட்டு இறைச்சி உட்கொண்ட தகவலை இந்தியாவிலுள்ள தனது குடும்பத்தினர் அறிந்தால் தன்னை குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைத்துவிடுவார்கள் என்றும் இதனை அங்காடியினர் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்திற்காக மிகப்பெரிய அங்காடி நிறுவனத்துக்கு எதிராக தன்னால் நீதிமன்றமெல்லாம் போகமுடியாது என்றும் தனது சொந்த ஊரான டில்லிக்கு சென்று மாட்டு இறைச்சி உட்கொண்டதால் தனது உடம்பில் ஏற்பட்டுள்ள அழுக்கினை சாமியர்களின் ஊடாக புனிதம் செய்வதற்கு அங்காடியினர் ஒழுங்கு செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்தப்புனிதப்படுத்தும் செயன்முறைக்கு 4 முதல் 6 வாரங்கள் எடுக்கலாம் என்றும் அதற்காக நியூஸிலாந்திலிருந்து டில்லி சென்று வருவதற்கான விமான பயணச்சீட்டு, அங்கு தங்குமிட வசதிக்கான ஒழுங்கு மற்றும் அந்தக்காலப்பகுதியில் நியூசிலாந்திலுள்ள தனது வியாபர நிறுவனமான சிகையலங்கரிப்பு நிலையத்தை மூடுவதால் ஏற்படப்போகும் தொழில் நஷ்டம் ஆகியவற்றை குறிப்பிட்ட அங்காடி ஈடு செலுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்கு குறிப்பிட்ட அங்காடியினர் மறுத்தால் நீதிமன்றத்தின் ஊடாக நஷ்ட ஈட்டைப்பெற்றுக்கொள்வதற்கு தான் பரீசிலித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now