நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெற்ற இனவெறித்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு தேறிவருபவர்களுக்கு நியூசிலாந்து நாட்டு வதிவிட உரிமையை வழங்குவதற்கு அந்நாட்டு அரசு முடிவெடுத்திருக்கிறது.
நியூசிலாந்து அரசின் இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு அந்நாட்டின் குடிவரவு அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Christchurch Response (2019) என்ற சிறப்பு விசா சரத்தின் கீழ் இந்த விசாக்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரைஸ்ட்சேர்ச் மசூதிகளில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த துப்பாக்கி நபர் கடந்த மார்ச் மாதம் நடத்திய கொடூரமான தாக்குதலில் ஐம்பது பேர் கொல்லப்பட்டார்கள். பலர் காயமடைந்தனர்.
மேற்குறிப்பிட்ட சிறப்பு விசா வழங்குவது தொடர்பாக நியூசிலாந்து அரசு அறிவிக்கையில் - தாக்குதலில் நேரடியாக பாதிக்கப்பட்டவரும் அவரது குடும்பமும் விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றும், இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள் தாக்குதல் நடைபெற்ற அன்று நியூசிலாந்தில் இருந்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
இன்று புதன்கிழமை முதல் இந்த விசாவுக்குரிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
நியூசிலாந்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்நாட்டு பிரதமர் Jacinda Ardern நாட்டின் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த ஆளுமைப்பண்பு குறித்து உலகளாவிய ரீதியில் பலரும் பாராட்டுக்களை தெரிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
