மெல்பேர்னின் இரண்டாவது விமானநிலையமான Avalon, இன்று உத்தியோகபூர்வமாக தனது சர்வதேச விமானசேவையை ஆரம்பித்தது.
மெல்பேர்ன் நகரிலிருந்து ஒரு மணி நேரத்தொலைவில் உள்ள Avalon விமானநிலையத்தில் இன்று காலை 8.20 மணியளவில் முதலாவது சர்வதேச விமானம் பயணிகளுடன் வந்திறங்கியது.
மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட AirAsia X Flight D7218 - விமானம் Avalon விமானநிலையத்தில் வந்திறங்கிய முதலாவது சர்வதேச விமானம் என்ற பெருமையைப் பெறுகிறது.
மெல்பேர்னின் ஒரே சர்வதேச விமானநிலையமான Tullamarine ஊடாக பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதையடுத்து, மத்திய அரசாங்கத்தின் 20 மில்லியன் உதவியுடனும் விக்டோரிய அரசின் உதவியுடனும் 48 மில்லியன் டொலர் செலவில் Avalon விமான நிலையம் சர்வதேச சேவைக்கேற்றதாக நிர்மாணிக்கப்பட்டது.
இன்று முதல் சர்வதேச விமான நிலையமாக இயங்கவுள்ள Avalon ஊடாக முதலாண்டில் 50 ஆயிரம் பயணிகள் பறப்புக்களை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லாராவில் அமைந்துள்ள LinFox நிறுவனத்துக்கு சொந்தமான Avalon தனியார் விமான நிலையம் பன்னெடுங்காலமாக உள்ளூர் சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Share
