மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை சட்ட நடவடிக்கை எதுவுமில்லாமல் சொந்த நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கு மலேசிய அரசு விதித்த காலக்கெடு நேற்று டிசெம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் இந்த அறிவிப்பை விடுத்த மலேசிய அரசு சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்கள் தங்களது ஆவணங்களைக்கொண்டுவந்து குடிவரவு அலுவலகத்தில் ஒப்படைத்தால் சட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் நாட்டுக்கு அனுப்பிவைப்பதாக அறிவித்திருந்தது.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை அடுத்து கடந்த மாதம் பெருமளவிலானோர் மலேசியாவின் புத்ரஜெயா நகரிலுள்ள குடிவரவு அலுவலகத்தில் குவிந்திருந்தனர்.
இவ்வாறு குடிவரவு அலுவலகத்துக்கு படையெடுத்து வந்து சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்குமாறு கோரிய 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் - 53 ஆயிரத்து 328 பேர் இந்தோனேஷியர்கள் என்றும் 38 ஆயிரத்து 734 பேர் பங்களாதேஷ் நாட்டவர்கள் என்றும் 22 ஆயிரத்து 964 பேர் இந்தியர்கள் என்றும் 6 ஆயிரத்து 923 பேர் மியான்மார் நாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
