SKIP TO MAIN CONTENT

முன்னாள் பிரதமர் Malcolm Turnbull தனது சுயசரிதை நூலில் என்ன கூறியுள்ளார்?

ஆஸ்திரேலியாவின் 29ஆவது பிரதமர் மல்கம் டர்ன்புல்லின் சுயசரிதை-Autobiography of Malcolm Turnbull- அண்மையில் வெளிவந்திருக்கிறது. நூல் ஆய்வு: இரா. சத்யநாதன்

sbs
Source: SBS TAMIL

6 min read

Published

Updated

By R.Sathiyanathan


Skip to article content

ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித்தலைவர், நாட்டின் பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் மல்கம் டர்ன்புல். அதைத்தாண்டி, அவர் பிரபல வழக்கறிஞர், republic movement – அதாவது   ஆஸ்திரேலியாவை குடியரசாக மாற்றவேண்டும் என்ற முயற்சியின் முன்னோடிகளுள் பிரதானமானவர். மட்டுமல்ல, Rhodes Scholarship என்ற மிக உயரிய புலமைப்பரிசிலைப் பெற்ற Rhodes scholar ( ஏனைய Rhodes scholarship பெற்ற இரு அரசியல்வாதிகள், Bob Hawke , Tony Abbott ஆகியோர்). அவர் ஒரு பிரபல Investment Banker. மொத்தத்தில் அவரை இந்த நாடறியும்.

மல்கம் டர்ன்புல் ஒரு பெருஞ்செல்வந்தர். உண்மைதான். ஆனால் அவர் செல்வந்தரின் குடும்பத்தில் பிறந்தவரல்ல. அவர் மிக சாதாரண குடும்பம் ஒன்றிலே பிறந்தவர். பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலத்திலும் அவர் ஆரம்பித்த investment banking என்ற அமைப்பு மூலமாகவும் பெருஞ்செல்வத்தைச் சம்பாதித்தவர். அவரின் கடின உழைப்புக்கும், புத்திசாலித்தனத்துக்கும் அது சான்று.    இப்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வு பெற்றுவிட்டார்.

Malcolm and Lucy Turnbull at his farewell Canberra press conference.
AAP Source: AAP

மல்கம் டர்ன்புல்லின் மனைவி, Lucy Turnbull பிரபல வழக்கறிஞர், சிட்னி நகர முன்னாள் மேயர். அத்தோடு இப்பதவிக்கு வந்த முதல் பெண்மணி.     City expert in metropolitan planning என்ற அமைப்பின் தலைவராக இருந்தவர் Lucy Turnbull என்பது மட்டுமல்ல, cancer institute, Dice kids, Sydney children hospital foundation மற்றும் பல்வேறு, லாபநோக்கமின்றி இயங்கும் அமைப்புகளோடு தொடர்புடையவர். தயாள குணம் மிக்க, பலரும் அறிந்த பரோபகாரி. இவர்களுக்கு ஒரு மகனும் மகளும்   அவர்கள் வழி பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

A bigger picture book
Source: A bigger picture book

மல்கம் தனது தாயார் Coral பற்றி ஞாபகம்வைத்திருப்பது, குறிப்பாக டைப்ரைடரின் ஓசைதான். அது வானொலி நாடகங்களின் காலம். தாய் Coral அப்போது எண்ணற்ற வானொலி நாடகங்களை எழுதிக்கொண்டிருந்தார். அவரது வானொலி நாடகங்கள் ஒவ்வொன்றும் இரண்டு மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தன. சமகாலத்தில் அவர் பல ஒலிபரப்பு நிலையங்களுக்கு நாடகங்களை எழுதிக்கொண்டிருந்தார். Remington typewiter ஐ நாடகங்களை எழுத அவர் பயன்படுத்தியதால், வீட்டினுள் தனது தாயையும் டைப்ரட்டர் ஓசையையும் அவரால் வேறுபடுத்தி பார்க்கமுடியவில்லை என்று மல்கம் குறிப்பிடுகிறார்.

A bigger picture book
Source: A bigger picture book

தந்தை Bruce ஒரு தரகர். Pubs என்ற விடுதிகளை விற்கும் நடவடிக்கைகளுக்கு தரகராக இருந்தார். தாய் பட்டதாரி, எழுத்தாளர், இலக்கியம், வரலாறு, கவிதை என்பவற்றோடு ஈடுபாடுள்ள குழுக்களோடு தொடர்பிலிருந்தவர். நூலகத்தில் அவருக்கு பொழுது போவதே தெரியாது. ஆனால் தந்தை Bruce இன் பெற்றார் இருவரும் ஆசிரியர்கள் என்றபோதும், Bruce சிறுவயதிலேயே Hunter valley நிலக்கரி சுரங்கத்திற்கு வேலைக்குப் போய்விட்டார். ரக்பி விளையாடுவதில் பேரார்வம் கொண்டவர் . அதிகம் படித்தவரல்ல. புத்தகங்களுக்கும் அவருக்கும் காத தூரம். இதனால் கணவன் மனைவிக்கிடையே பெரிய இடைவெளி இருந்தது.

Turnbull
Source: Lib party ad

தந்தை Bruce இற்கு நிலையான வருமானமும் இல்லை. தனது வருமானத்திலேயே குடும்பம் இயங்கிவருவதாக தாயார் Coral எப்போதும் குத்திக்காட்டிக்கொண்டிருந்தார். மல்கம் அவரது எட்டாவது வயதில் Sydney grammar என்ற பிரபல பாடசாலையில் சேர்க்கப்பட்டதோடு ஹாஸ்டலிலும் சேர்க்கப்பட்டார். இதன்பின்பு சிறிது காலத்தில் தாயார் மேல்படிப்பிற்காக நியூசீலந்து போய்விட்டதாக தந்தை Bruce கூறினார். ஆனால் உண்மையில் தாய் Coral, வேறு ஒரு உறவை ஏற்படுத்திக்கொண்டு அங்கு புதிய கணவனுடன் வாழப்போய்விட்டார் என்பது மல்கமுக்கு தெரியவர பல வருடங்கள் எடுத்தன. ஆனால் தந்தையார் Bruce, தாயார் Coral பற்றி கடைசிவரை தப்பாக ஒருவார்த்தை சென்னதில்லை என்பதை மல்கம் டர்ன்புல் தனது சுயசரிதையில் உணர்ச்சி பூர்வமாக கூறுகிறார்.

தாயார் Coral, அவ்வப்போது மல்கமுக்கு கடிதங்கள் எழுதுவதுண்டு. ஒருமுறை நியூசீலந்து சென்று தனது  தாயாரை அவர் பார்த்துள்ளார்.

Turnbull
Source: Bigger Pic

ஹாஸ்டல் செலவுகள் கட்டுப்படியாகாத நிலையிலும், Bruce இன் வருமானம் நிலையாக இல்லாத காரணத்தினாலும் சிறிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு அப்பாவும் மகனும் ஒன்றாக வசித்தார்கள். சிலவேளைகளில் ஸகூல் பீஸ் கட்டுவதே  பெரும்பாடாக இருந்தது. இருந்தபோதும் இங்குதான் அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே, இரு நண்பர்களுக்கிடையே ஏற்படக்கூடிய சிநேகம் உருவானது என்றும் மல்கம் டர்னபுல் குறிப்பிடுகிறார். படிப்படியாக, தந்தை Bruce இன் வருமானம் அதிகரித்ததோடு, மல்கமிற்கு பதினான்கு வயதாகும் போது, Bruce மறுமணம் செய்துகொண்டார். பின்னர் 12 வருடங்களின் பின் விவாகரத்து செய்தார்.

1973 இல் மல்கம் சிட்னி பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க சேர்ந்தார்.  இடையிடையே வானொலிக்கும், தொலைக்காட்சிக்கும், நீதிமன்ற நிருபராகவும் ஓய்வு நேரங்களில் பணியாற்றியிருக்கிறார்.அப்போதுதான் செல்வந்தரும் media mogul என்ற, பொதுசன ஊடகங்கள் பலவற்றின்  உரிமையாளருமான Kerry Packer இன் அறிமுகம் கிடைக்கிறது. அதன்பின்பு உயரிய Rhodes scholarship பெற்று லண்டன் Oxford இல் கல்விகற்று நாடுதிரும்பி, 1980 இல் Lucy ஐத்திருமணம் செய்தார்.  இதற்கிடையேதந்தை Bruce, 56வயதில், single engine plane விமான விபத்தில் இறந்துபோனார். 

Turnbull
Source: Bigger Pic

இதைத்தொடர்ந்து மல்கம், Wentworth தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு முதலில் தோல்வியடைந்து பின்னர் அடுத்த தேர்தலில் வென்றார். தொடர்ந்து பிரதமர் ஜோன் ஹாவார்டின் அமைச்சரவையில் இடம் பிடித்து, லிபரல் ஆட்சி கவிழ்ந்ததும், எதிர்க்கட்சி தலைவரானார்.  பின்னர், மால்கத்தை கவிழ்த்துவிட்டு Tony Abbott எதிர்கட்சித் தலைவரானதும், பின்னர், Tony Abbott பிரதமராகப் பொறுப்பேற்ற இரண்டாவது வருடத்திலேயே  கட்சித்தலைவராக மல்கம் டர்ன்புல் தெரிவுசெய்யப்பட்டு பிரதமரானதும் நூலில் விவரிக்கப்படுகிறது.

Former Prime Minister Malcolm Turnbull.
Former Prime Minister Malcolm Turnbull. Source: SBS News

மீண்டும் மல்கம் டர்ன்புல் 2018 பொதுத்தேர்தலில் பிரதமராக தெரிவுசெய்யப்பட்டதும் மூன்று ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாகவே, பாரளுமன்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் விருப்பப்படி, spill என்ற ‘கட்சிக்கூட்டத்தில் வேறு தலைவர் தெரிவு செய்யப்படவேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பின்னர்  மீண்டும் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதில்லை என்று ஒதுங்கிக்கொண்டார். அக்கூட்டத்தில் தற்போதைய பிரதமர் Scott Morrison பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதும் என்று அடுக்கடுக்கான சம்பவங்களை சுமார் 700 பக்கங்களில், மிக தெளிவான நாட்குறிப்புகளின் துணையோடு, மிக விபரமாக சொல்கிறார் மல்கம்.

Former prime minister Malcolm Turnbull with his then Treasurer Scott Morrison.
Former prime minister Malcolm Turnbull with his then Treasurer Scott Morrison. Source: AAP

கடந்த 25 ஆண்டு காலப்பகுதியில், நம்மில் பலர் இந்த செய்திகளோடு பரிச்சயமானவர்கள் என்ற முறையில் இவை சுவாரஸ்யமாக அமைவது மட்டுமல்ல, inside story என்று சொல்வார்களே,  இந்த செய்திகளுக்குப்பின்னணியாக இருந்த நபர்கள், சம்பவங்கள், சதிகள், தனிமனித அபிலாஷைகள், அரசியல் சூழ்நிலைகள் என்பவற்றை மிக நுணுக்கமாகவும் நேர்மையாகவும் இந்த சுய சரிதை சொல்கிறது. இதனால் இந்த நூல், கடந்த கால்நூற்றண்டுகால சமூக, பொருளாதார, அரசியல் வரலாற்றைப் பதிவுசெய்யும் ஒரு உன்னதமான ஆவணம் என்று துணிந்து சொல்லமுடியும்.

ஆஸ்திரேலியாவை Republic என்ற குடியரசாக மாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள், Murray darling ஆற்று நீரைப்பகிர்வதில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள், NBN என்ற அகண்ட அலைக்கற்றை துறையில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தங்கள், same sex marriage என்ற ஒருபால் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கியது, அதிபர் ஒபாமா காலத்தில் Trans  Pacific Partnership ஒப்பந்தத்தை, நாட்டின் நலன் கருதி நிராகரித்தது,  அதிபர் ஒபாமாவுடன் செய்து கொள்ளப்பட்ட அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தை, Trump பதவிக்கு வந்ததும் ஏற்றுக்கொள்ளச்செய்தது, Section 44 என்ற, குடியுரிமை தொடர்பாக பாரளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்த அரசியல் வாதிகளின் பிரச்சனை, ஒரு சீட் பெரும்பான்மையடன் நித்தியகண்டம் என்ற சூழ்நிலையில், ஆட்சி செய்தது என்று மல்கம் டர்ன்புல் அரசியல்வாதியாகச் சந்தித்த சவால்கள் பக்கச்சார்பின்றி வர்ணிக்கப்படுவது இந்த சுயசரிதையின் பலமாகும்.

Malcolm Turnbull initially inked the asylum seeker deal with Donald Trump’s predecessor, but Mr Trump was forced to comply.
Malcolm Turnbull initially inked the asylum seeker deal with Donald Trump’s predecessor, but Mr Trump was forced to comply. Source: AAP

அதே நேரத்தில் Kevin Rudd  பதவிக்காலத்தில், மல்கம் எதிர்கட்சித்தலைவர் பதவியை இழந்த காரணத்தால் ஏற்பட்ட depression  மனச்சோர்வு காரணமாக , தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் உருவானது தொடர்பாகவும், பின்னர் பிரதமரானபோது, தீட்டிய வாளோடு பழிவாங்க காத்திருந்த  எதிரிகள் மத்தியில் அமைச்சரவையில், கூட்டுப்பொறுப்புடன் அவர்களுடனேய செயலாற்ற வேண்டி ஏற்பட்ட சூழ்நிலைகள் என்பன பற்றியெல்லாம், ஒளிவுமறைவின்றி சுயசரிதையில் ஆசிரியர் மல்கம் குறிப்படுகிறார்.

John Howard, Kerry packer, Alan Bond, Tony Abbott, Peter Dutton, Kevin Rudd, Barnaby Joyce, Bill Shorten, Gonski, Barack Obama, Donald Trump, Xi Jinping என்று சமகாலத்தில் அரசியலிலும், பொதுவாழ்விலும் இருந்தவர்களோடு ஏற்பட்ட அனுபவங்கள் உரசல்கள் என்பன இந்த நூலில் விரிவாகச் சொல்லப்படுகின்றன.

Malcolm Turnbull, Tony Abbott, Julie Bishop and Scott Morrison
Source: AAP

ஒரே நாளில் 30 லட்சம் டாலர்களை casino சூதாட்டத்தில் இழக்கும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகள், கிரிமினல் குற்றங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட Kerry Packer, இவரிடம் 1பில்லியன் டொலருக்கு channel 9 TV நிலையத்தை வாங்கி திவாலான நிலையில், மீண்டும் அவருக்கே அதில் கால் பங்கு விலைக்கு மீண்டும் விற்ற Alan bond, துணைப்பிரதமர் Barnaby Joyce தன்னுடைய காரியாலயத்தில் பணியாற்றிய பெண்ணுடன் உறவிலிருப்பதை மறைத்து, பின்னர் அந்தப் பெண்ணுக்குப்பிறந்த குழந்தைக்கு தந்தை தான்தான் என்று பிரகடனப்படுத்திய நிகழ்வு, carbon இற்கான கட்டணத்தைத் தவறுதலாக carbon tax என்று குறிப்பிட்டதனால் பதவி இழக்கக் காரணமான Julia Gillard , Axe the tax, stop the boat என்பதையே பத்தாயிரந் தடவை சொல்லி பிரதமரான Tony Abott, பிரதமர் பதவியை இழந்த சில வருடங்களில், தன்னை ஐக்கிய நாடுகள் சபைக்கு செயலாளர் நாயகமாக நியமிக்கும்படி பிரதமர் Malcom Turnbull இடம் கோரிக்கைவைத்து அது  நிராகரிக்கப்பட்டபோது, பிரதமரை தகாத வார்த்தைகளால் தொலைபேசியில் திட்டிய Kevin Rudd, South China Sea தமது நாட்டின் territorial waters, ‘எல்லைகளுக்கு உட்பட்டபகுதி’ என்று வாதிட்டுவந்த சீன அதிபர் Xi Jingping , ‘அந்த பைத்தியக்காரனை  வெள்ளை மாளிகைக்குள் அமெரிக்க அதிபராக மக்கள் அனுப்ப மாட்டர்கள்’ என்று Trump பற்றி அபிப்பிராயம் தெரிவித்த Barack Obama...என்று நிஜ கதாபாத்திரங்கள் இந்த சுய சரிதை முழுவதும் விரவிக்கிடக்கிறார்கள். பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா, இந்தியா, சீனா, பிரான்ஸ், நியூசீலாந்து, வட கொரியா, தென் கொரியா போன்ற நாடுகளின் சமகால பிரதான அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகள் விளக்கப்பட்டிருப்பது நூலின் செறிவுக்கு வலு சேர்க்கின்றன.

sbs
Source: SBS TAMIL

கவர்னர், பிரதமர், நாடாளுமன்றம், மேல்சபை, அமைச்சரவை, தேர்தல் என்ற அரச இயந்திரத்தின் வெளியே தெரியும் காட்சியும், அதிகாரம் உண்மையில் ஒரு சில தனி நபர்களிடமும் பிரபல ஊடகங்களின் கையிலுமே செறிந்திருக்கிறது என்பதையும் இவற்றின் முன்னால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு, வலு இழந்து போவதையும் இந்த சுயசரிதை வெளிச்சத்திற்கு கொண்டுவருகிறது. பொதுமக்கள் மத்தியில் பெருஞ்செல்வாக்கு இருந்தபோதும் அருகிலேயே இருந்த ‘புரூட்டஸ்’களாலும், Alan Jones , Ray Hadley போன்ற செல்வாக்கு மிக்க வானொலி ஆளுமைகளாலும், Rupert Murdoch குழும பத்திரிகைகளின் பிரச்சாரம் காரணமாகவும் பழிவாங்கக் காத்திருந்த முன்னாள் பிரதமர் Tony Abott போன்ற எதிரிகளாலும், மக்கள் தந்த மூன்று  ஆண்டு பிரதமர் பதவிக் காலத்தை பூர்த்தி செய்ய முடியாமலேயே வெளியேற நேர்ந்த ஒரு பிரதமரின் கதை தான் A Bigger Picture- autobiography of Malcom Turnbull.  


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now