கருத்தரித்தல் என்று பார்க்கும்போது அதனால் ஏற்படக்கூடிய உடல், உள மற்றும் சமூக தாக்கங்களால் பாதிக்கப்படுவது பெண்தான் என்பதில் சந்தேகமில்லை. இதன் காரணமாகவே பெண்கள் கருத்தடை மாத்திரைகளைப் பெருமளவில் வாங்குகிறார்கள்; பயன்படுத்தப்படுகிறார்கள். இதை கிரமமாகவும் சரியாகவும் உட்கொள்ளும் பொறுப்பும் பெண்களையே சார்கிறது. பெண்களுக்கான வேறு கருத்தடை உபகரணங்கள் இருந்தபோதும் சௌகர்யம் கருதி மாத்திரைகளே பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
உலகம் முழுவதும் கருத்தடை மாத்திரைகளைப் பல நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இவற்றை வாங்குவதற்கு GP-வைத்தியரின் prescription தேவை. எது ஒருவருக்கு உகந்தது என்பதுபற்றியும் GP யிடம் ஆலோசனை பெறலாம். கருத்தரித்தலைப்பொறுத்த அளவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சம பங்கு இருந்தபோதும் பெண்களே அதன் விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியிருக்கிறது.
ஆண்கள் கருத்தடை செய்துகொள்ள இப்போதுள்ள இரண்டே வழிகளுள் ஒன்று ஆணுறை; மற்றையது vasectomy என்ற சத்திரசிகிச்சை. சத்திரசிகிச்சை செய்துகொள்ள ஆண்கள் விரும்பவதில்லை. பெண்களுக்கான கருத்தடை மாத்திரை நடைமுறையில் இருந்தாலும், ஆண்கள் பயன்படுத்த கருத்தடை மாத்திரை ஒன்றைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் கடந்த பல தசாப்தங்களாக இடம்பெற்று வந்துள்ளன.

பெண்களுக்கான கருத்தடை மாத்திரை 1950 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனாலும் மத, மற்றும் கலாச்சார, சமூக அழுத்தங்கள் காரணமாக உடனடியாக,பரவலாக இது பயன்பாட்டுக்கு வரவில்லை. பல மதகுழுக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தன. பல நாடுகளில் திருமணமான ஒரு பெண் மட்டுமே கருத்தடை மாத்திரையைப் பயன்படுத்த அனுமதி இருந்தது.
ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான கருத்தடை மாத்திரை அறிமுகமாக 11 வருடங்கள் எடுத்தன. 1961 இல்தான் இங்கு பெண்களுக்கான கருத்தடை மாத்திரை பயன்பாட்டுக்கு வந்தது. பெண் கருத்தடை மாத்திரையைப் பயன் படுத்த, கணவனின் அல்லது துணையின் அனுமதியைப் பெறத்தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டதாலும், அரசு சலுகைவிலையில் மாத்திரைகளின் விலையை குறைத்ததாலும் பெண்கள் கருத்தடை மாத்திரையை மிகப்பரவலாகப் பயன்படுத்தும் நிலை உருவானது. பெண்களுக்கான கருத்தடைமாத்திரை, பெண்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியையும் சுதந்திரத்தையும் அளித்ததோடு பெண்ணுரிமை சித்தாந்தங்கள் வலுப்பெற வழிகோலியது என்றும் சமூக ஆய்வாளர்களால் கணிக்கப்படுகிறது.
பெண்களுக்கு மாதந்தம் ஏற்படும் மாதவிடாயை அடிப்படையாகக் கொண்டதே பெண்களுக்கான கருத்தடை மாத்திரை. அது பெண்களின் கருப்பையில் இருந்து கரு முட்டை வெளிவருவதைத் தடுப்பதோடு கருப்பையின் வாயிலில் தடித்த திரவத்தை உற்பத்திசெய்து ஆணின் விந்தணுக்கள் கருப்பைக்குள் புகவிடாமல் தடுக்கின்றது. இதற்கு இரண்டுவிதமான ஹார்மோன்கள் மாத்திரை தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. Progesterone, estrogen என்ற இந்த ஹார்மோன்கள் சில பெண்களுக்கு மிக மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வழமையாக சிலபெண்களுக்கு ஏற்படக்கூடிய பக்கவிளைவுகளான, உடல் பருமனடைதல், தலைவலி, இரத்த உறைவு, இரத்தப்போக்கு என்பவை காரணமாக சில பெண்களால் மாத்திரைகளை தொடர்ந்து பயன்படுத்த முடிவதில்லை.

பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் நிறைய பக்க விளைவுகளைத் தருவதால் குழந்தை வேண்டாம் என்ற முடிவுக்கு வருவோருக்கு ஆணுக்கான கருத்தடை மாத்திரைகள் பயன்தரும் என்பதில் சந்தேகமில்லை.
ஆணுக்கான கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்படவேண்டும் என்ற தேடலில் அமெரிக்காவில் Washington State University ஐச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை ஒன்றைத் தயாரிக்கும் பணியில் வெற்றி கண்டுள்ளனர். ஆண்களுக்கான கருத்தடை மாத்திரை தயாரிப்பதில் மேற்கொள்ளப்படவுள்ள அணுகுமுறை வித்தியாசமானது. இவை ஹார்மோன்களைக் கொண்டு தயாரிக்கப்படவில்லை என்பதுதான் விசேட அம்சமாகும். ஆகவே ஹார்மோன் மாத்திரைகள் பெண்களுக்கு ஏற்படுத்தும் சாதாரண மற்றும் கடுமையான பக்கவிளைவுகள் எதையும் இந்த மாத்திரை ஏற்படுத்தாது.
பக்கவிளைவுகள் ஏற்படுத்தாத கருத்தடை மாத்திரை எப்படி சாத்தியமானது என்றால் Gene technology என்ற துறையில் ஏற்பட்டுள்ள பாரிய முன்னேற்றம் என்று வைத்திய நிபுணர் டாக்டர் Nick Coatsworth கூறுகிறார். Washington State University இலுள்ள ஆராய்ச்சியாளர்கள் Arrdc5 என்ற ஒரு gene ஐ கண்டுபிடித்திருக்கிறார்கள். Protein செறிந்த இந்த இந்த gene தான் ஆண்களின் விந்தணு எண்ணிக்கை, அவற்றின் அசைவு, உருவம், என்பவற்றைத் தீர்மானிக்கிறது என்பதும் இந்த gene மேலுள்ள protein ஐக் களைவதால், விந்தணு வீரியமற்றுவிடும் என்பதும் விஞ்ஞானிகளின் முடிவாகும்.
விந்தணுவை வீரியமற்றதாக்க protein ஐ அகற்றுவதே தற்போது தயாரிப்பிலிருக்கும் மாத்திரைகளின் அணுகுமுறை. மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்தினால் விந்தணுக்கள் மீண்டும் வீரியம் பெற்றுவிடும். ஆகவே இந்த சிகிச்சை முறை முற்றிலும் reversible என்ற ‘பழையபடி முந்தைய நிலைக்கு மீள’ வசதியளிப்பதாகும்.

ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் போலவே தினமும் இவைகளை சாப்பிடவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த மாத்திரை செயல்பட சில வாரங்கள் எடுக்கும் என்றும் அதேபோல இதை உட்கொள்வதை நிறுத்திவிட உத்தேசித்தால் reverse என்ற பழைய இயல்பான நிலைமை ஏற்படவும் சில வாரங்கள் எடுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகண்டுபிடிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் பலர் இறங்கியிருப்பதால் வேறு வகையான ஆண்களுக்கான கருத்தடை முறைகள் அல்லது சிகிச்சைகள் ஆய்வில் உள்ளன. ஊசி மருந்து மூலமாக விந்தணுக்களின் வீரியத்தையும் எண்ணிக்கையையும் குறைக்கும் முறைகள் ஆராய்ச்சியில் உள்ளன. அதேபோல பெண்களுக்கான கருத்தடை மாத்திரையிலுள்ள ஹார்மோன்களைக்கொண்ட ஆனால் சருமத்தில் பூசக்கூடிய gel ஆக பயன்படுத்தப்கூடிய முறையொன்றும் ஆய்விலுள்ளது. இது clinical ஆய்வு மட்டத்தில் நல்ல பலனளிப்பதாகச் சொல்லப்படுகிறது.
எனவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்று பலவகையான கருத்தடை மாத்திரைகளும் மருந்துகளும் விரைவில் மருந்தகங்களை நிரப்ப வந்தடையும் என்று நம்பலாம்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
