படுகொலை செய்யப்பட்டு மர்மமான வகையில் புதைக்கப்பட்ட இந்தியப்பெண் ஒருவரின் மரணம் தொடர்பில் இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மாணவர் விசாவில் வந்த 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபருக்கு எதிராக பொலீஸார் கொலைக்குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்கள். இந்தச் சம்பவம் தெற்கு ஆஸ்திரேலியாவிஅல்ல இடம்பெற்றுள்ளது.
சில நாட்களாகக் காணமல்போயிருந்த இந்தியப்பெண் ஒருவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார், குறிப்பிட்ட இளைஞனை விசாரித்தபோது, அவர் தெற்கு ஆஸ்திரேலியாவின் Hawker பகுதிக்கு அருகாமையில் பொலீஸாரை அழைத்துச்சென்று, அங்கு குறிப்பிட்ட பெண் புதைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், அவரது மரணத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அப்பெண்ணின் மரணம் தொடர்பில் பொலீஸாருக்கு தகவல் தெரிவிக்காதமை குறித்து முதலில் குற்றச்சாட்டினை பதிவுசெய்த பொலீஸார், குறிப்பிட்ட இளைஞனை தொடர்ச்சியாக விசாரித்தபின்னர், அவருக்கு எதிராக கொலைக்குற்றச்சாட்டினையும் பதிவு செய்துள்ளார்கள்.
குறிப்பிட்ட பெண்ணின் மரணம் மார்ச் 4 ஆம் திகதிக்கும் 8 ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெற்றிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்பதை மாத்திரம் தற்போது தெரிவித்துள்ள பொலீஸார், கொலை தொடர்பான மேலதிக விவரங்கள் தொடர்பில் தாம் விசாரித்துக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்கள்.
கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இளைஞனை எதிர்வரும் டிசெம்பர் மாதம்வரைக்கும் தடுப்புக்காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
