SKIP TO MAIN CONTENT

சிட்னியில் மனைவியை வெட்டிக்கொன்ற குற்றச்சாட்டில் இந்தியர் கைது!

Police tape
Police tape Source: AAP

2 min read

Published

Updated


Skip to article content

மனைவியை வெட்டிக்கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட நபர் ஒருவர் சிட்னி பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

காயங்களுடன் கைதுசெய்யப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை முடிந்தபின்னர் தற்போது பொலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்னி வட மேற்கு பகுதியில் Quakers Hill பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 27 வயதுடைய தனது மனைவியை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் 31 வயதுடைய குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

2016 ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்திருந்தார்கள் என்றும், குறிப்பிட்ட நபர் nursery-யில் பகுதிநேரமாக வேலை செய்துவந்தார் என்றும், இவரது மனைவி முழுநேரமாக கல்விகற்றுவந்தார் என்றும் கூறப்படுகிறது.

இவர்களுக்கு இடையில் ஏற்கனவே சச்சரவுகள் ஏற்பட்டு சில வாரங்களுக்கு முன்னர்-  கணவனிடமிருந்து பாதுகாப்பினை வழங்கும் AVO உத்தரவுக்கு- குறித்த பெண் விண்ணப்பித்திருந்தபோதிலும்  இருவரும் ஒரே வீட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் இடம்பெற்ற நேற்றிரவு தம்பதியரோடு ஒரே வீட்டில் தங்கியிருக்கும் பெண்ணின் சகோதரர் வேலை முடிந்து வரும்போது, தனது சகோதரி வெட்டுக்காயங்களுடன்  ரத்த வெள்ளத்தில் கிடக்கக்கண்டிருக்கிறார்.

அதேவேளை, மைத்துனர் கையில் காயங்களோடு வீட்டிற்குள் காணப்பட்டதையடுத்து உடனடியாக  அவசர சேவைப்பிரிவினருக்கு அறிவித்திருக்கிறார்.

இவர்கள் தங்கியிருந்த வீட்டில் இன்னுமொரு தம்பதியினர் வசித்துவருகின்றபோதும், சம்பவம் இடம்பெற்ற நேரம் அவர்கள் அங்கிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற நேரம் வீட்டிற்குள் கத்தியழுத சத்தம்  கேட்டதாக அயலவர்கள் கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்னர் இவர்களது வீட்டிலிருந்து பெண்ணொருவர் வேகமாக ஓடியதாகவும் அவரை ஆணொருவர் கலைத்துக்கொண்டுபோனதை கண்டதாகவும் அயலிலுள்ள மற்றொருவர் கூறியிருக்கிறார்.

If you - or anyone you know - is experiencing domestic violence, call 1800 RESPECT ((1800 737 732)). In an emergency, call Triple Zero.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now