SKIP TO MAIN CONTENT

பாலியல் தொழிலாளி மீது வல்லுறவு:மெல்பேர்னில் இந்திய இளைஞனுக்கு 6 வருட சிறை!

General view of the County Court of Victoria, Melbourne, Monday, October 14, 2019. (AAP Image/James Ross) NO ARCHIVING
General view of the County Court of Victoria, Melbourne, Monday, October 14, 2019. Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

பாலியல் தொழிலாளியை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மெல்பேர்னில் இந்திய இளைஞர் ஒருவருக்கு County Court ஆறு வருட சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

சமையல்துறையில் கற்கைநெறியை மேற்கொள்வதற்காக ஆஸ்திரேலியா வந்த இவர்,  தண்டனைக்காலம் முடிவடைந்த பின்னர் நாடு கடத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மெல்பேர்ன் கொலிங்வூட் பகுதியில் அமைந்துள்ள பாலியல் சேவை வழங்கும் விடுதிக்கு நிறைபோதையில் சென்ற குறிப்பிட்ட இந்திய இளைஞர், பணம் செலுத்தி உள்ளே சென்று பாலியல் தொழிலாளி ஒருவரை முறையற்ற விதத்திலும் அவரது சம்மதமின்றியும் வல்லுறவு கொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இந்த வழக்கு கடந்த டிசெம்பர் மாதம் ஜூரிகளின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

பாலியல் தொழிலாளிகளென்றாலும் அவர்களுடைய சேவையை பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்துகின்றபோதிலும் அவர்களது சம்மதத்துடனேயே அந்த சேவையை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும், தங்கள் வாடிக்கையாளர்களை நிராகரிப்பதற்கு அவர்களுக்கு பூரண உரிமை உண்டு என்றும் நீதிபதி இந்த விசாரணையின்போது கூறியுள்ளார்.

குற்றஞ்சாட்டப்பட்டவர் தொடர்பான மனநல மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த மருத்துவர், போதிய பாலியல் அறிவின்மை, மொழிச்சிக்கல் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட இரவில் போதையிலிருந்தமையும் இந்தக்குற்றத்துக்கு காரணங்களாகியிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள  குறிப்பிட்ட இந்திய இளைஞருக்கு ஆறு வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும் மூன்று வருடங்களில் பரோலில் வெளியேவர விண்ணப்பிக்கமுடியும்.

ஆனால், எப்போது விடுவிக்கப்பட்டாலும் இவர் விடுதலையானவுடன் நன்நடத்தை அடிப்படையில் அவரது விசா ரத்துச்செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now