தனது முன்னாள் காதலியுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த வீடியோக்களை பாலியல் தளங்களில் வெளியிடப்போவதாக மிரட்டியதுடன் அவரது கணவருக்கும் அவற்றை அனுப்பி தொல்லைகொடுத்த நபரை அடிலெய்ட் நீதிமன்றம் இரண்டுமாதங்களுக்கு சிறையில் தள்ளியுள்ளது.
தெற்கு ஆஸ்திரேலியாலியாவில் கடந்த ஒக்டோபரில் கைதுசெய்யப்பட்ட இந்த 26 வயது வெளிநாட்டு மாணவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவந்த விசாரணையின் முடிவில், குறிப்பிட்ட நபர் தனது குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து, அடிலெய்ட் நீதிமன்றம் ஒரு வருடம் 25 நாட்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இவர் சிறையில் நன்நடத்தையை வெளிப்படுத்தினால் இரண்டு மாதங்களில் விடுதலை செய்யப்படுவார் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சட்டங்களில் கடந்த 2018ம் ஆண்டு சேர்த்துக்கொள்ளப்பட்ட revenge porn-பழிவாங்கும் பாலியல் தாக்குதலுக்கு எதிரான சட்ட ஏற்பாட்டின் கீழ் வழங்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த தீர்ப்பு இது என்று தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட நபரின் இந்த நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டிலிருந்த அவரது முன்னாள் காதலி, ஆஸ்திரேலிய பொலீஸாரைத்தொடர்புகொண்டு முறையிட்டதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டவரை அழைத்து, அவரது தொலைபேசி, கணனி ஆகியவற்றை பொலீஸார் சோதனை செய்தபோது, அவர் தனது முன்னாள் காதலியை மிரட்டுவதற்காக பயன்படுத்திய வீடியோக்கள் மற்றும் உரையாடல்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டிருந்தன.
முன்னர் உறவிலிருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் குறிப்பிட்ட பெண்ணின் சம்மதத்தோடு எடுக்கப்பட்டிருப்பதை பொலீஸார் உறுதிசெய்தபோதும், அந்த உறவு முறிந்தபிறகு, குறிப்பிட்ட வீடியோக்களை பழிவாங்கும் சாதனமாக பயன்படுத்தியது தண்டனைக்குரிய குற்றமாக வழக்குப் பதிவுசெய்தார்கள். அந்த வழக்கின் மீதான தீர்ப்பில் மேற்படி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்துகொண்டு தனது சொந்த நாட்டிலுள்ள முன்னாள் காதலியுடன் மேற்கொண்ட மிரட்டல் உரையாடல்களின்போது, குறிப்பிட்ட நபர் தான் ஆஸ்திரேலிய பிரஜை இல்லையென்பதால், தான் மேற்கொள்கின்ற இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு ஆஸ்திரேலிய பொலீஸாரால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளமுடியாது என்று கூறினார் என்றும் பொலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
1800 RESPECT (1800 737 732)
Lifeline 13 11 14
