வீட்டில் ரொக்கெட் தயாரித்துக்கொண்டிருந்தபோது திரவ இரசாயனக்குடுவை வெடித்ததில் 40 வயது குடும்பஸ்தரின் ஒரு கை முற்றாக துண்டிக்கப்பட்டதுடன் ஒரு காலும் முறிந்து வேறு பல காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறிப்பிட்ட நபர் உயிரோடு தப்பியது பெரும் அதிசயம் என்று பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.
பிறிஸ்பன் Chermside பிரதேசத்தை சேர்ந்த குறிப்பிட்ட நபர் முன்னரும் இவ்வாறு சிறிய ரொக்கெட்டுகள் தயாரித்து அந்த முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்த காரணத்தினால் வழக்கம்போல இம்முறையும் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார் என்று பொலீஸார் கூறியுள்ளனர்.
ரொக்கெட்டுக்காக இரசாயனத்திரவத்தை கலக்கிக்கொண்டிருக்கும்போது இந்த பாரிய வெடிப்புச்சம்பவம் இடம்பெற்றதால் குறிப்பிட்ட நபருக்கு ஒரு கை முற்றாக துண்டானதுடன் ஒரு காலும் உடைந்து வேறு பல காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.
இவர் இரசாயனத்திரவத்தை கலக்குவதற்கு சற்று முன்னர் இவருக்கு அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த 74 வயது முதியவர் குறித்த நபரின் 4 வயது குழந்தையுடன் வீட்டின் மேல் தளத்துக்கு சென்றுவிட்டார். அவர்கள் அருகில் நின்றிருந்தால் நிச்சயமாக மூவரும் சடலமாகத்தான் மீட்கப்பட்டிருப்பார்கள் என்று பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட நபர் எப்படிப்பட்ட ரொக்கெட்டுக்களை தயாரித்தார்? என்னவகையாக இரசாயனப்பொருட்களை பயன்படுத்தினார்? அவற்றின் பயன்பாடு எத்தகையது என்பது பற்றி பொலீஸார் விசாரணை செய்து வருகிறார்கள்.
