ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சி பீடமேறியதிலிருந்து மனுஸ் தீவில் இதுவரை முப்பது அகதிகள் தங்களுக்கு தாங்களே ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளிலும் தற்கொலை முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்கள் என்றும் அங்குள்ள அகதிகளின் நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலுள்ள அகதிகளை எக்காரணத்தைக்கொண்டும் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில்லை என்ற கொள்கையை பேணிவரும் லிபரல் கட்சி கடந்த தேர்தலில் தோற்கடிப்பட்டால் லேபரின் ஆட்சியில் தங்களுக்கும் சாதகமானதொரு முடிவு கிட்டும் என்று அங்குள்ள அகதிகள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத நிலையில் அகதிகளின் மனநிலை மோசமடைந்து மிகுந்த விரக்தியடைந்துள்ளார்கள் என்று அங்கு சென்றுள்ள அகதிகள் நல அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மனுஸ் தீவு அகதிகள் தொடர்ச்சியாக தற்கொலைக்கு முயற்சித்துவருவதாகவும் அவர்களது முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு கொண்டுசெல்லும்போது அங்கு அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் தகுந்த சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்றும் அகதிகள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த திங்கட்கிழமை 30 வயது சோமாலி அகதி ஒருவரும் 31 வயது ஈரானிய அகதி ஒருவரும் தூக்கில் தொங்கி தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார்கள். இவர்களுடன் கடந்த மே 18 ஆம் திகதி முதல் அங்கு தங்களுக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அகதிகளின் எண்ணிக்கை முப்பதாக உயர்ந்துள்ளது.
Share
