பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்திவருபவர்கள், 48 மணிநேரத்திற்குள் இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்ல வேண்டுமென காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்யத்தவறும் பட்சத்தில் வலுக்கட்டாயமாக, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நேரிடும் என பப்புவா நியூகினி அரசின் அதிகாரிகள் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை மனுஸ் தடுப்பு முகாம் நிரந்தரமாக மூடப்பட்டதையடுத்து, இம்முகாமிற்கான மின்சாரம், நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
எனினும் குறித்த முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்திவரும் தமது நிலையைக் கருத்திற்கொண்டு, அடிப்படை வசதிகளை மீள வழங்க வேண்டுமென வலியுறுத்தி அங்குள்ள அகதிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இக்கோரிக்கையில் தகுந்த காரணம் எதுவுமில்லை எனக் கூறியிருந்தது.
இதையடுத்து சகல வசதிகளுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ள பப்புவா நியூகினி அரசு, மனுஸ் தடுப்பு முகாமைச் சுற்றியுள்ள வேலிகளை நீக்கும் பணி இன்று ஆரம்பமாகும் என தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக அங்குள்ளவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதுடன், தொடர்ச்சியாக போராட்டம் நடத்துவது அவர்களுக்கே பாதிப்பை உண்டுபண்ணும் என்பதால் 48 மணிநேரத்திற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டுமென குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதுடன், அங்கு தமது உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறி அங்குள்ள 600 பேர் தமது போராட்டத்தைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
