SKIP TO MAIN CONTENT

மனுஸ்தீவு அகதிகளில் நெருப்புக்காய்ச்சல் தாக்கம்! இதுவரை இருவர் வைத்தியசாலையில்!

AAP
A March 21, 2014 file image of Asylum seekers staring at media from behind a fence at the Manus Island detention centre, Papua New Guinea. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

மனுஸ் தீவு அகதிகள் பலரை நெருப்புக்காய்ச்சல் தாக்கியிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக்காய்ச்சலின் தீவிர தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இரண்டு அகதிகள் இதுவரை Port Moresby வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் 15-20 அகதிகள் இந்த நோய்த்தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கிறார்கள்.

உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல இந்தக்காய்ச்சல் ஏனைய அகதிகளுக்கும் பரவிவிடாத வகையில், அகதிகள் தங்குமிடங்கள் அனைத்தும் இரசாயன ரீதியில் சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் காலப்பகுதியில் மனுஸ் தீவு வைத்தியசாலைகளில் போதிய மருத்துவர்கள் இல்லாதமையினாலும் சில வைத்தியசாலைகளில் தேவையான மருத்துவ உபகரணங்கள் இல்லாத காரணத்தினாலும் இவ்வாறு பாரதூரமான நோய் தாக்கங்களினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதில் மனுஸ் தீவு மருத்துவ வட்டாரங்கள் சரியான மருத்துவ நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என்று அங்குள்ள அகதிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெருப்புக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் ஒரு அகதி அண்மையில் மனுஸ்தீவு வைத்தியசாலையொன்றுக்கு சென்றபோது அதற்கு எந்த மேலதிக மருத்துவ நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் வருடமொன்றுக்கு ஒருகோடி 60 லட்சம் பேர் நெருப்புக்காய்ச்சல் தாக்குதலுக்கு உள்ளாகுவதாகவும் இவர்களில் 16 ஆயிரம் பேர் ஆண்டொன்றுக்கு மரணிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now