மனுஸ் தீவில் அகதி ஒருவர் தனக்குத்தானே தீமூட்டி து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து உடனடியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மூலம் அவர் உயிராபத்து எதுவுமின்றி காப்பாற்றப்பட்டுள்ளார் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சோமாலியாவை சேர்ந்த 30 வயதுடைய அகதி ஒருவரே இவ்வாறு தீக்குளித்தார் என்று அங்குள்ள அகதிகள் நல அமைப்பு வட்டாரங்களின் ஊடாக தெரியவருகிறது.
ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி கூட்டணி ஆட்சி பீடம் ஏறியது முதல் இதுவரை சுமார் 70 தற்கொலை முயற்சி சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீக்குளிப்பு இடம்பெற்றிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் இன்னொரு சோமாலிய அகதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று இடம்பெற்ற தீக்குளிப்பு சம்பவத்தில் காப்பாற்றப்பட்ட குறிப்பிட்ட சோமாலிய அகதியின் உடலின் மேற்பகுதி தீயினால் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வைத்தியசாலையில் தற்போது சேர்க்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட அகதியின் எரிகாயங்களுக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டிருப்பதாகவும், அகதிகளுக்கு பொறுப்பான நலன்புரி அமைப்பு நிலைமைகளை அவதானித்துவருவதாகவும் கூறப்படுகிறது.
Share
