மனுஸ் தீவில் கடந்த வெள்ளிக்கிழமை தனக்குத்தானே தீயிட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்ற இந்திய அகதி ஒருவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு காரணிகளால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குறித்த நபருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் மறுக்கப்பட்டதையடுத்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற இந்தச்சம்பவத்தில் அவரது தங்குமிடமும் பெரும் சேதத்துக்குள்ளாகியிருக்கிறது.
சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள 31 வயதான குறிப்பிட்ட இந்திய அகதிக்கு முகம் மற்றும் கைகளில் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்துடன் 62 அகதிகள் சம்பந்தப்பட்ட 95 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்றும் இவர்கள் அனைவரும் தங்களுக்கு தாங்களே ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Refugee Action Coalition அமைப்பின் பேச்சாளர் Ian Rintoul கூறும்போது - சுமார் ஆறு வருடங்களாக கொடிய துயரை அனுபவித்துவரும் இந்த அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் எடுப்பதைப்பற்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது அவர்கள் மருத்துவ காரணங்களுக்காகக்கூட ஆஸ்திரேலியாவுக்குள் வருவதை தடை போடுவதற்கு சட்டத்தை திருத்துவதில் அரசாங்கம் தீவிரமாக செயற்பட்டுவருகிறது - என்று விசனம் தெரிவித்துள்ளார்.
Share
