ஆஸ்திரேலியாவில் புகலிடம் தேடி வந்த நிலையில் மனுஸ் தீவில் வாழ்ந்து வரும் அகதிகள் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா- அமெரிக்கா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தகுதிவாய்ந்த அகதிகள் அமெரிக்காவில் குடியமர்த்தப்படவுள்ளனர்.
குறித்த அகதிகளை உடனடியாக அமெரிக்கா அனுப்பிவைப்பதற்கே தமது அரசு விரும்புவதாகவும், இருப்பினும் அமெரிக்கா வருடமொன்றுக்கு உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கை, அரைவாசியாகக் குறைக்கப்பட்டதால், அக்டோபர் வரை காத்திருக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மனுஸ்தீவு தடுப்பு முகாமை மூடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த முகாம் அக்டோபர் இறுதியுடன் முழுமையாக மூடப்பட்டுவிடுமெனவும் நவுறு முகாம் தொடர்ந்து இயங்குமெனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மனுஸ் மற்றும் நவுறுவிலுள்ள சுமார் 1200 பேர், அமெரிக்காவில் குடியமர்த்தப்படுவர் எனத் தாம் நம்புவதாக குடிவரவு அமைச்சர் Peter Dutton தெரிவித்துள்ளார்.