அமெரிக்கா - ஆஸ்திரேலியா இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் 17 அகதிகள் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவுக்கு செல்கிறார்கள்.
ஆஸ்திரேலிய குடிவரவுத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் அமெரிக்காவுக்கு பயணமாகும் இந்த பதினேழு பேரும் அமெரிக்க குடிவரவு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்டுவர் என்றும், அங்கு அவர்கள் குடியமர்த்தப்படுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா பயணமாகுபவர்களில் 11 பாகிஸ்தானியர்கள் மற்றும் 6 ரொஹிங்கர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் மனுஸ் தீவில் கடந்த ஐந்து வருடங்களாக தடுத்துவைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க - ஆஸ்திரேலிய நாடுகளுக்கு இடையில் முன்னாள் அதிபர்களாக பராக் ஒபாமா மற்றும் Malcolm Turnbull ஆகியோருக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் உள்ள 1250 அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதாக இணக்கம் காணப்பட்டிருந்தது.
இதுவரை நவுறு மற்றும் மனுஸ் தீவிலிருந்து மொத்தமாக 361 பேர் அமெரிக்கா சென்றுள்ள நிலையில், இன்னமும் 600 பேர் மனுஸ் தீவிலும் 800 பேர் நவுறு தீவிலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
