பப்புவா நியூ கினியின் மனுஸ் தீவு தடுப்பு முகாமில் அகதி ஒருவர் மரணமடைந்துள்ள நிலையில், இது ஒரு தற்கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மனுஸிலுள்ள Lorengau இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்ட, ஈரான் பின்னணி கொண்ட ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
குறித்த நபர் நீண்டநாட்களாக மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்ததாக, அவரது சக நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை அகதி ஒருவர் மனுஸ் தீவில் மரணமடைந்ததை உறுதிப்படுத்தியுள்ள ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களம், இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மனுஸ் தீவில் புகலிடக்கோரிக்கையாளர்களை தடுத்து வைத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினடிப்படையில், அங்கு ஆஸ்திரேலிய அரசால் நிர்வகிக்கப்படும் Lombrum தடுப்பு முகாம் மூடப்பட்டுவரும் நிலையில், அங்கிருந்தவர்கள் Lorengau-இலுள்ள தற்காலிக தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டுவருகின்றனர்.
ஆனால் Lorengau-இல் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அங்குள்ள அகதிகள் அச்சம் வெளியிட்டிருந்ததுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், ஈரான் அகதி ஒருவர் மரணமடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
