பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் இன்றுடன் மூடப்படுகின்ற நிலையில், அங்குள்ள நூற்றுக்கணக்கான ஆண்களின் நிலை தொடர்பில் விளக்கமளிக்குமாறு, ஆஸ்திரேலிய அரசிடம் பப்புவா நியூ கினி அரசு கோரியுள்ளது.
உண்மையான அகதிகள் என அடையாளம் காணப்படாத, மற்றும் பப்புவா நியூகினியில் குடியமர மறுக்கும் அகதிகளுக்கு, ஆஸ்திரேலிய அரசே பொறுப்பு என்பதால் தடுப்பு முகாம் மூடப்பட்ட பின் இவர்களின் நிலை தொடர்பில் விளக்குமாறு, அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் Petrus Thomas கூறியுள்ளார்.
இந்தநிலையில் அகதிகள் என இனங்காணப்பட்டவர்களை மூன்றாவது நாடொன்றில் குடியேற்றுவது மற்றும் அகதி அந்தஸ்து நிராகரிகரிக்கப்பட்டவர்களை அவர்களது சொந்த நாட்டு அரசாங்கங்களுடன் பேசி அங்கு திருப்பி அனுப்புவது தொடர்பில், தாம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக இடைக்கால பிரதமராக கடமையாற்றும் ஜுலி பிஷப் தெரிவித்தார்.
இது ஒருபுறமிருக்க, மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதுடன் அங்கு தமது உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறி, 600 ஆண்கள் அங்கிருந்து வெளியேற மறுத்துள்ளனர்.
எனினும் குறித்த முகாமிற்கான நீர், மின்சாரம் மற்றும் உணவு விநியோகம் என்பன இன்றுடன் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், தாம் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் பாரிய அவலத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
