பப்புவா நியூகினியின் மனுஸ் தீவு தடுப்பு முகாம் மூடப்படுவதாகவும் ஆனால் அங்குள்ள மற்றுமொரு தடுப்பு முகாம் தொடர்ந்து இயங்கும் எனவும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Rimbink Pato தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் பப்புவா நியூகினி நீதிமன்றம் மனுஸ் தீவு தடுப்பு முகாம் மூடப்பட வேண்டுமென உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் Lombrum naval base தடுப்பு நிலையத்துக்கே நீதிமன்றின் உத்தரவு பொருந்தும் எனவும், Lorengau இல் உள்ள மற்றுமொரு பெரிய நிலையத்தை நடத்துவதில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்ட 560 பேர் பப்புவா நியூகினியில் குடியமர்வதற்கு மறுத்து வரும் நிலையில், அவர்கள் அனைவரும் East Lorengau Transit நிலையத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என Rimbink Pato தெரிவித்துள்ளார்.
இதேவேளை பப்புவா நியூகினி அரசு, நீதிமன்றின் தீர்ப்பை தவறாகப் புரிந்து கொண்டுள்ளதாகவும், குறித்த தீர்ப்பானது அந்நாட்டிலுள்ள அனைத்து முகாம்களுக்கும் பொருந்தும் எனவும் பிரபல சட்ட வல்லுனர் David Manne கூறியுள்ளார்.
