ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு 150 அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து அரசு தயாராகவுள்ள நிலையில், இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவை ஐ.நா சபை ஊக்குவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 31ம் திகதி, பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற மறுத்து 420 பேர் போராட்டம் நடத்திவருகின்ற பின்னணியில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ள ஐ.நாவின் UNHCR அமைப்பு, நியூசிலாந்து அரசின் இச்சலுகையை ஆஸ்திரேலியா ஏற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளது.
இதேவேளை மனுஸ் முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்துபவர்கள், சகல வசதிகளுடனும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 3 தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டுமென, பப்புவா நியூகினி அரசு தொடர்ச்சியாக அறிவித்துவருகின்றது.
ஆனால் மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்து வெளியேறி இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்வதில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதுடன், அங்கு தமது உயிர்களுக்கு ஆபத்து எனக் கூறி அங்குள்ள 420 பேர் தமது போராட்டத்தைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
