பப்புவா நியூகினியின் மனுஸ் தடுப்பு முகாம் நிலைமைகளை ஆஸ்திரேலியா கையாளும் முறை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது எனச் சாடியுள்ள நியூசிலாந்துப் பிரதமர் Jacinda Ardern, இவ்விடயம் தொடர்பில் பிரதமர் Malcolm Turnbull-உடன் மீண்டும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து பிரதமராக இருந்த John Key, ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை தமது நாடு ஏற்றுக்கொள்ளத் தயார் என அறிவித்திருந்த நிலையில், இச்சலுகை இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், ஆஸ்திரேலியா இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern, கடந்த வாரம் சிட்னி வந்தபோது தெரிவித்திருந்தார்.
எனினும் முன்னரைப்போலவே இச்சலுகையை மறுத்திருந்த பிரதமர் Malcolm Turnbull, தற்போதைக்கு இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது எனவும், படகு மூலம் வந்தவர்களை நியூசிலாந்தில் குடியமர்த்தினால் ஆட்கடத்தல்காரர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அது வழிகோலும் எனவும் தமது முடிவினை நியாயப்படுத்தியிருந்தார்.
இந்தப்பின்னணியில் கிழக்காசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இவ்வாரம் பிலிப்பைன்ஸ் செல்லும் நியூசிலாந்துப் பிரதமர், அங்கு வைத்து மனுஸ் விவகாரம் தொடர்பில் பிரதமர் Malcolm Turnbull-உடன் மீண்டும் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக கூறியுள்ளார்.
இதேவேளை மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்திவருபவர்கள், 48 மணிநேரத்திற்குள் இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்ல வேண்டுமென விதிக்கப்பட்ட காலக்கெடுவையும் மீறி, 12-வது நாளாக அங்குள்ள 400க்கும் மேற்பட்டவர்கள் தமது போராட்டத்தைத் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
