SKIP TO MAIN CONTENT

நியூசிலாந்தில் அடைக்கலமான ஆஸ்திரேலிய அகதி!

Behrouz Boochani and a friend at the airport in Papua New Guinea.
Behrouz Boochani and a friend at the airport in Papua New Guinea. Source: Twitter

2 min read

Published

Updated


Skip to article content

மனுஸ் தீவில் கடந்த ஆறு வருடங்களாக ஆஸ்திரேலிய அகதியாகவிருந்த குர்திஷ் ஊடகவியலாளரும் படைப்பாளியுமான Behrouz Boochani நேற்று நியூசிலாந்தினை சென்றடைந்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி கிறைஸ்ட்சேர்ச்சில் நடைபெறவுள்ள இலக்கிய விழாவில் கலந்துகொள்வதற்காக விருந்தினர் விசாவில் அங்கு சென்றுள்ள Behrouz Boochani மீண்டும் மனுஸ் தீவுக்கு திரும்பும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.

Behrouz Boochani speaks shortly after touching down in New Zealand.
بهروز بوچانی در حال صحبت با خبرنگاران اندکی پس از رسیدن به نیوزیلند Source: Twitter

கடந்த 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு அகதியாக வந்த Behrouz Boochani அப்போதைய அரசின் குடிவரவுக்கொள்கையின் பிரகாரம் மனுஸ் தீவுக்கு அனுப்பப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்கு தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் Behrouz Boochani எழுதிய "No Friend But The Mountains" என்ற நூல் ஆஸ்திரேலியாவின் விக்டோரிய மாநில அரசின் உயர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த நூல் அதிகூடிய பரிசுப்பணத்துடன் வெற்றியும் பெற்றது.

இந்த நூலினை அவர் மனுஸ் தீவிலிருந்தபோது, வட்ஸ் அப் வழியாக அமெரிக்காவிலிருந்த நண்பனுக்கு அனுப்ப, அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக தொகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மனுஸ் தீவிலிருந்து Behrouz Boochani அவர்களுக்கு கிடைத்துள்ள விடுதலை, அகதிகள் தரப்பில் மனநிறைவுக்குரிய விடயமாக பார்க்கப்பட்டாலும், மனுஸ் தீவு அகதிகளுக்கு Behrouz Boochani ஒருவரே நம்பிக்கைக்குரிய மொழிபெயர்ப்பாளராகவும் உற்ற தோழனாகவுமிருந்தார் என்று கூறப்படுகிறது.

அந்தவகையில், அங்கு தற்போது எஞ்சியுள்ள அகதிகளுகளுக்கு Behrouz Boochani நியூசிலாந்து சென்றுள்ளமை சிறிய இழப்புத்தான் என்று தெரிவிக்கப்படுகிறது.

நியூசிலாந்து சென்றுள்ள Behrouz Boochani தான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்வதாக கூறியுள்ளார். மனுஸ் தீவுக்கு ஒருபோதும் இனிமேல் திரும்பிப்போகமாட்டேன் என்றும் கூறியுள்ள அவர், எங்காவது ஒரு இடத்தில் ஒரு மனிதனாக வாழ ஆசைப்படுகிறேன். இலக்கத்தினால் அடையாளப்படுத்தப்படாமல் அகதி என்ற முகவரியோடு அலையாமல் விடுதலைக்காற்றை எனது இதயத்தினால் சுவாசிக்க ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Behrouz Boochani போல் இந்த வருட ஆரம்பத்தில் Abdul Aziz என்ற ஆஸ்திரேலிய அகதி மனுஸ் தீவிலிருந்து சர்வதேச மனித உரிமைகள் விருதொன்றினை பெற்றுக்கொள்வதற்காக ஜெனிவா சென்று அங்கேயே அகதி அந்தஸ்து பெற்று வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now