உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படும் நோபல் பரிசுகள் இந்த வாரம் முழுக்க அறிவிக்கப்படுகின்றன.
அந்தவகையில் நேற்று ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில், மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த உடற்கூறியல் ஆய்வு விஞ்ஞானி Yoshinori Ohsumi-க்கு இந்த வருடத்துக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளதாக நோபல் பரிசுக்குழு அறிவித்துள்ளது.
Autophagy என்று அழைக்கப்படும் செல்களின் அடிப்படையான செயல்பாடுகளில் முக்கியமான கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்காக இந்த விருது வழங்கப்படவுள்ளது.
Ohsumi 1945ம் ஆண்டு ஜப்பானில் பிறந்தவர். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் 1974-ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றவர். டோக்கியோ தொழில்நுட்ப கல்லூரியில் 2009-ம் ஆண்டு முதல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
Ohsumi ஜப்பான் நாட்டிலிருந்து நோபல் பரிசைப் பெறும் 23-வது நபர் என்பதுடன் , அங்கிருந்து மருத்துவத்துறைக்காக நோபல் பரிசைப் பெறும் 6-வது நபரும் ஆவார்.
இதேவேளை Autophagy என்பது நமது உடல் செல்கள் தன்னைத்தானே உண்பது. இதுதான் நமது உடலின் மிக முக்கியமான தற்காப்பு நடவடிக்கை.
பழைய செல்களை அழிப்பதற்கும், புதிய செல்களை உருவாகவும் இதுதான் உதவுகிறது. இந்த Autophagy முறையில் நடக்கும் குளறுபடிகள்தான் பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக அமைகின்றன.
இப்படி Autophagy முறையினைத் தடுக்கும் ஜீன்களை Ohsumi கண்டறிந்திருக்கிறார். இவை பெரும்பாலான நோய்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு விடையாக அமைந்திருக்கின்றன.இந்த Autophagy-யை குறிவைத்து மருந்துகள் தயாரிக்க, தற்போது பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.
