தீராத நோயினால் கடந்த ஐந்து வருடகாலத்துக்கு மேல் பாதிக்கப்பட்டிருந்த விக்டோரியாவைச்சேர்ந்த முன்னாள் தீயணைபப்பு படைவீரர் ஒருவர் தன்னை கருணைக்கொலை செய்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து பயணமாகியுள்ளார்.
அவர் விண்ணப்பித்ததற்கு இணங்க இன்று அவருக்கு ஊசி மருந்து ஏற்றுவதன் மூலம் அவருக்கான மரணம் சம்பவிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.
மெல்பேர்னைச் சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான Troy Thornton கடந்த ஐந்து வருடங்களாக Cerebellar atrophy நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
வெளிநாடுகளில் சென்று பல சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டபோதும் அவரது நோயை குணப்படுத்த முடியாது என்று அனைத்து மருத்துவர்களும் கை விரித்துவிட்டார்கள்.
இந்நிலையில் தனது மரணத்தை செயற்கையாக ஏற்படுத்துவதன் மூலம் தனது குடும்பத்தினருக்கு பாரமில்லாமல் தனது வழியை தானே முடிவெடுக்கப்போவதாக Troy Thornton கோரிக்கை முன்வைத்திருகிறார்.
விக்டோரியாவில் இதற்குரிய சட்டம் அண்மையில் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டபோதும், இந்த வகையிலான மரணத்தை ஏற்படுத்துவதற்கான தகுதியை பெற்றுக்கொள்வதில் இறுக்கமான கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றில் முக்கியமானது,இன்னும் 12 மாதங்கள் மாத்திரம்தான் உயிர்வாழ்வார் என்று மருத்துவர்களால் உறுதிசெய்யப்பட்ட நபர் ஒருவரே இந்த செயற்கை மரணத்துக்கு விண்ணப்பிக்கமுடியும்.
ஆனால் அதற்கு Troy Thornton தகுதி பெறவில்லை. ஆகவேதான், Troy Thornton சுவிட்சர்லாந்துக்கு சென்று இந்த செயற்ககை மரணத்தை ஏற்படுத்துவதற்கு பயணமாகியுள்ளார்.
Troy Thornton தற்போது ஒழுங்காக உணவுண்ணமுடியாது. எழுந்து நடக்கவும் முடியாது. புரியும் வகையில் பேசுவதும் இயலாத வகையில் நாக்கு புரளத்தொடங்கிவிட்டது.
இந்நிலையில் தனது எதிர்காலம் தனது குடும்பத்தினருக்கு பாரமாக இருக்கக்கூடாது என்ற முடிவுடன்தான் தனது மரணத்தை தீர்மானித்ததாக Troy Thornton தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு தீயணைப்பு படை வீரராக பல மரணங்களை பார்த்தவர் என்றும் தனது உற்றதோழன் ஒருவன்கூட தற்கொலை செய்துகொண்டவன் என்றும் தனக்கு மரணத்தின் வலியை அருகிலிருந்து அனுபவதித்தல் எவ்வாறு கொடுமையானது என்பது புரியும் என்றும் Troy Thornton கூறியுள்ளார். அந்த அனுபவத்தை தனது குடும்பத்தினருக்கு கொடுக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
Troy Thornton சுவிட்சர்லாந்துக்கு தனது மனைவியுடன் மாத்திரமே பயணமாகியுள்ளார். பிள்ளைகளை பேரன் பேர்த்திமாருடன் விக்டோரியாவிலேயே விட்டுச்சென்றுள்ளார். தங்களது தகப்பனாரின் மரணத்தை ஏற்றுக்கொள்வதற்கான முடிந்தளவு மனத்திடத்தை அவரது குழந்தைகள் ஏற்படுத்திக்கொண்டுள்ளார்கள் என்று Troy Thornton-வின் மனைவி கூறியிருக்கிறார்.
அண்மையில்ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற விஞ்ஞானி 104 வயது David Goodall இவ்வாறு சுவிட்சர்லாந்து சென்று செயற்கை மரணமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
