புற்றுநோய்க்கும் புகைப்பிடித்தல், சூரிய ஒளி மற்றும் asbestos உள்ளிட்டவற்றுக்கும் இடையிலான தொடர்பு பற்றி ஆஸ்திரேலியர்களில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் மதுபானத்துக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்புபற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறார்கள் என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
பெரும்பாலும் மதுப்பானத்துடன் தொடர்புடைய புற்றுநோயானது மார்பகங்கள் மற்றும் குடல் உள்ளிட்டவற்றின் மென் திசுக்களிலேயே உருவாவதாக Flinders University ஆராய்ச்சியாளர் Dr Emma Miller தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மதுபானம் புற்றுநோயை உருவாக்கும் காரணிகளில் ஒன்று என 1988ம் ஆண்டு International Agency for Research on Cancer-இனால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.
இந்தப் பின்னணியில் சிகரெட் பாக்கெட்டுகளில் புற்றுநோய் எச்சரிக்கை வாசகம் அச்சிடப்படுவதுபோலவே மதுபானப்போத்தல்களிலும் எச்சரிக்கை வாசகங்கள் அச்சிடப்படவேண்டுமென ஆராய்ச்சியாளர் Dr Emma Miller வலியுறுத்தியுள்ளார்.
இதன் முதற்கட்டமாக புற்றுநோய் எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்பட்ட(mock labels) மதுப்போத்தல்களை சுமார் 1600 ஆஸ்திரேலியர்களிடம் கொடுத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த 1600 பேரில் 70 வீதமானவர்கள் இப்படியான எச்சரிக்கை வாசகங்கள் பொறிக்கப்படுவது புற்றுநோய் ஆபத்து தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் இவ்வெச்சரிக்கை வாசகங்கள் தமது மதுப்பழக்கத்தை நிறுத்திவிடாது என 50 வீதமானவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது சிலவகை மதுப்போத்தல்களில் “கர்ப்பகாலத்தில் மது அருந்தவேண்டாம்” “பொறுப்புணர்வுடன் மது அருந்துங்கள்” போன்ற வாசகங்கள் மிகச்சிறியளவில் பொறிக்கப்பட்டிருந்தாலும் அது போதுமானதாக இல்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள ஆராய்ச்சியாளர் Dr Emma Miller புற்றுநோய் எச்சரிக்கை வாசகங்கள் மதுப்போத்தல்களில் பொறிக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
ஆனால் மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் இது தேவையற்ற ஒன்று என மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
