SKIP TO MAIN CONTENT

அகதிகள் மருத்துவ தேவைக்காக ஆஸ்திரேலியா வருவதை எளிதாக்கும் சட்டம் மீளபெறப்படுகிறது!

medevac law
Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

நவுறு மற்றும் மனுஸ் தீவுகளிலுள்எ அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவையென்றால் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துவருவதை எளிதாக்கும் சட்டத்தை மீளப்பெறுவதற்கு அரசுக்கு அனுமதி கிடைத்துள்ளது. 

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் அடிப்படையில் சுயாதீன செனட்டர் Jacqui Lambie-இன் ஆதரவுடன் இச்சட்டத்தை அரசு மீளப்பெறுகிறது.

இரு மருத்துவர்களின் பரிந்துரை அல்லது மருத்துவ குழுவின் பரிந்துரை அல்லது அமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் அகதிகள் மற்றும் புகலிடம்கோருவோரை மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கலாம் என்ற ரீதியில் இச்சட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது.

லேபர் மற்றும் கிரீன்ஸ் கட்சிகளின் ஆதரவுடன் கடந்த பெப்ரவரி மாதம் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பின்னணியில் நவுறு மற்றும் மனுஸ் அகதிகள் போலி மருத்துவ காரணங்களைக்காட்டி ஆஸ்திரேலியாவுக்குள் வர முற்படுவார்கள் என ஆரம்பம் முதலே குற்றம்சாட்டிவந்த அரசு, இச்சட்டத்தை மீளப்பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சித்துவந்தது.

அத்துடன் இச்சட்டம் நாட்டின் எல்லைப் பாதுகாப்பை பலவீனப்படுத்திவிட்டதாகவும் ஆட்கடத்தல்காரர்கள் இதைக் காரணமாக வைத்து தமது வியாபாரத்தை மீள ஆரம்பித்துவிடுவார்கள் எனவும் அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற செனட் அவையில் குறித்தசட்டத்தை மீளப்பெறுவதற்கு செனட்டர் Jacqui Lambie-இன் ஆதரவு தேவைப்பட்டதையடுத்து அவருடன் பேச்சு நடத்திய அரசு, அவர் விதித்த நிபந்தனைக்கு இணங்கியதையடுத்து  Jacqui Lambie அரசுக்கு ஆதரவு வழங்கியதாக கூறப்படுகிறது. 

இதேவேளை அரசிடம் தான் என்ன நிபந்தனையை விதித்தார் என்பதை வெளியே கூறமுடியாமல் இருப்பதாக Jacqui Lambie தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த இரகசிய உடன்படிக்கை என்னவென்பதை நாடாளுமன்றுக்கும் நாட்டுமக்களுக்கும் அரசு தெரியப்படுத்த வேண்டுமென கிரீன்ஸ் மற்றும் லேபர் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now