SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் தமிழ் பெண்ணை அடிமையாக வைத்திருந்த குற்றச்சாட்டு: விசாரணை மீண்டும் ஆரம்பம்!

A lady is seen walking past the entrance to the Supreme Court of Victoria
File image- A lady is seen walking past the entrance to the Supreme Court of Victoria Source: AAP

1 min read

Published

Updated


Skip to article content

மெல்பேர்னில் தமிழ் பெண்மணி ஒருவரை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள தம்பதியர் மீதான அடுத்தகட்ட வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.

குறித்த தம்பதியரின் வீட்டில் 2007ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பணிபுரிந்த இப்பெண்ணுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், அவரை தமிழ்நாட்டிற்கு திரும்பிச்செல்ல அனுமதிக்காமல் தமது வீட்டில் தொடர்ந்தும் அடிமைபோல வைத்திருந்தார்கள் எனவும்  குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜுலை மாதம் குறித்த பெண்ணுக்கு உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மெல்பேர்ன் தம்பதியர்மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு தடவைகள் ஆஸ்திரேலியா வந்து தங்கியிருந்துவிட்டு திரும்பிய இப்பெண் 2007ம் ஆண்டு இங்கு வந்ததன்பின்னர் வீடுதிரும்ப அனுமதிக்கப்படவில்லை எனவும் அவரது சுற்றுலா விசா எப்போதோ முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த சில ஆண்டுகளாக தொடரும் பின்னணியில் அடுத்தகட்ட விசாரணை கடந்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பெண்ணை அடிமையாக வைத்திருக்கவில்லை என்றும் இவை அனைத்தும் தமக்கு எதிராக புனையப்பட்ட பொய்க்குற்றச்சாட்டுகளே என்றும் மெல்பேர்ன் தம்பதியினர் தொடர்ச்சியாக தெரிவித்துவருகின்றனர்.

தமது கட்சிக்காரரின் நெருங்கிய குடும்ப அங்கத்தவராகவே அப்பெண் நடத்தப்பட்டதாகவும், வீட்டினர் அனைவரும் அவரை 'அம்மாச்சி' என்று அன்பாகவே அழைத்துவந்ததாகவும் வீட்டு வேலைகளில் உதவிபுரிந்துவந்த அவர் ஒருபோதும் அடிமையாக நடத்தப்படவில்லை எனவும் தம்பதியர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்களில் ஒருவர் தெரிவித்தார்.

'அடிமை' என்ற சொற்பதம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று எனவும் இதற்கேற்றாற்போல் சம்பவங்களும் மிகைப்படுத்தப்பட்டு வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்த வழக்கறிஞர், குறித்த பெண்ணுக்கு வேண்டுமென்றே தீங்கிழைக்கும் நோக்கம் தமது கட்சிக்காரருக்கு கிடையாது என்றும் கூறினார்.

கடந்த வாரம் ஆரம்பமான இவ்வழக்கு விசாரணை சுமார் 6 வாரங்கள் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now