தமிழ்ப்பெண் ஒருவரை வீட்டுவேலையாள் என்ற பெயரில் எட்டு வருடங்கள் அடிமையாக வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் தொடரப்பட்ட வழக்கில் மெல்பன் தம்பதியினர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் பத்து வாரங்களாக விக்டோரிய உச்ச நீதிமன்றில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் முடியில், இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நீதிபதிகள் குழு தனது முடிவை தெரிவித்திருந்தது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் - தமிழகத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட பெண்ணுடைய ஆஸ்திரேலிய விசா முடிவடைந்த நிலையில், அவர் இந்த வழக்கினை போலியாக புனைந்திருக்கிறார் என்று முன்வைத்த வாதத்தினை நீதிபதிகள் குழு நிராகரித்தது.
2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டுவரை குறிப்பிட்ட பணிப்பெண்ணை வீட்டுக்கு வெளியில் அனுமதிக்காமல் அடிமையாக வைத்திருந்து, பல்வேறு கொடுமைகளை மேற்கொண்டதாக குறிப்பிட்ட தம்பதியினர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
நாளொன்றுக்கு 3.39 டொலர் ஊதியம் மாத்திரமே வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டுக்களை மறுத்த தம்பதியினர், தாங்கள் குறிப்பிட்ட பணிப்பெண்ணை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே அன்பு செலுத்தியதாகவும் தங்களது குழந்தைகள் அவரை பாட்டியாக நினைத்து அன்பு செலுத்தியதாகவும் கூறினார்கள்.
விசாரணைகளது முடிவில், தம்பதியனர் இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டபோது, குற்றஞ்சாட்டப்பட்ட பெண் தனது கணவரின் தோளில் தலையை அடித்து அழுதார் என்று நீதிமன்ற தகவல்கள் தெரிவித்தன.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.