SKIP TO MAIN CONTENT

மெல்பேர்ன் விபத்து: Truck ஓட்டுனர் மீது போதைப்பொருள் கடத்தல் உட்பட 33 குற்றச்சாட்டுகள்

From left to right: Leading Senior Constable Lynette Taylor, Constable Josh Prestney, Senior Constable Kevin King, and Constable Glen Humphris.
From left to right: Leading Senior Constable Lynette Taylor, Constable Josh Prestney, Senior Constable Kevin King, and Constable Glen Humphris. Source: Victoria Police

1 min read

Published

Updated


Skip to article content

மெல்பேர்னில் நான்கு பொலீஸார் கொல்லப்பட்ட கோர விபத்துடன் தொடர்புடைய truck ஓட்டுனருக்கு எதிராக போதைப்பொருள் பாவனை உட்பட மேலதிகமாக 33 குற்றச்சாட்டுக்களை பொலீஸார் பதிவுசெய்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்தக்கூடியவகையில் வாகனத்தை ஓட்டினார் என்ற அடிப்படையில் ஏற்கனவே நான்கு குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் தடுப்புக்காவலில் உள்ள குறிப்பிட்ட truck ஓட்டுனருக்கு எதிராக இப்புதிய குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி பிற்பகல் 5.30 மணியளவில் அதிவேகமாக காரில் சென்ற ஒருவரை பொலீஸார் மறித்து Eastern நெடுஞ்சாலை ஓரத்தில்வைத்து சோதனை செய்தபோது, அவ்வழியாக வந்த truck- பொலீஸார் மீது மோதியது. இதில் நான்கு பொலீஸார் பலியானார்கள்.

இதைத்தொடர்ந்து ஓட்டுனரிடம் விசாரைணகளை மேற்கொண்ட பின்னர் 4 பிரிவுகளின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பொலீஸார் குறித்த நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

அதேநேரம் இவ்விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவந்த நிலையில், குறித்த ஓட்டுனர் மீது methamphetamine போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தல், கஞ்சா கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உட்பட புதிதாக 33 குற்றச்சாட்டுக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நபர் எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதி அடுத்த கட்ட விசாரணைக்காக நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.

இதேவேளை அவர் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், மருத்துவ ரீதியாக இனங்காணப்பபடாத மனநிலை கோளாறு அவருக்கு ஏற்கனவே இருந்திருக்கலாம் எனவும் ஓட்டுனரின் வழக்கறிஞர் முன்னதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now