SKIP TO MAIN CONTENT

நகைத் திருடருக்கு ஐந்து வருட சிறை

மஹ்மூத் தாஹா (Mahmoud Taha) என்ற 21 வயது இளைஞன், மெல்பேர்ணில் நகைக் கடைகளில் பல்லாயிரக்கணக்கான டொலர் பெறுமதியான நகைகளைத் திருடினார் என்று குற்றம் சாட்டப்பட்டு நடந்த விசாரணையின் பின்னர், அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Robbery underway
Source: CCTV Footage

2 min read

Published

By Kulasegaram Sanchayan



Skip to article content

மெல்பேர்ண் நகரில், 2006ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு சனிக்கிழமை, முகத்தை மூடியபடி, மூன்று இளைஞர்கள் ஒரு கடிகாரம் விற்கும் கடைக்குள் சென்று, கடை உரிமையாளரைப் பயமுறுத்தி, சுத்தியல் கொண்டு தளபாடங்களை உடைத்து, 70,500 டொலர் பெறுமதியான பொருட்களுடன் இலகுவில் தப்பிவிட்டார்கள்.  மஹ்மூத் தாஹாவுடன் சென்ற மக்கர் மயோம் (Maker Mayoum) மற்றும் அக்கோன் மாவீன் (Akon Mawien) என்ற இரு இளைஞர்களும் இதற்கு முன் எந்தக் குற்றமும் புரியாதவர்கள்.  நல்ல ஹோட்டல்களில் தங்கி, பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற மஹ்மூத் தாஹாவின் ஆசை வார்த்தைகளில் மயங்கி அவருடன் இணைந்து இந்தக் களவை செய்தார்கள் என நேற்று தீர்ப்பளிக்கப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

இந்த மூவரும் இலகுவில் இந்தக் கொள்ளையை செய்து முடித்தது, அவர்களுக்கு ஒரு தெம்பைக் கொடுத்துள்ளது.  திருடப்பட்ட வாகனத்தில் தப்பி ஓடியவர்கள், மெல்பேர்ண் புறநகர் Coburg என்ற இடத்தில், கொள்ளையிடச் சென்றுள்ளார்கள்.

மஹ்மூத் தாஹா (Mahmoud Taha)
Source: Facebook

இதில், மஹ்மூத் தாஹா ஒருவர் தான் ஏற்கனவே குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்.  மக்கர் மயோம் பதினெட்டு வயதைத் தாண்டவில்லை.  பத்தொன்பது வயதான அக்கோன் மாவீன், கிரிக்கெட் விளையாட்டில் நல்ல வீரனாக விளங்கினார்.  இந்த சம்பவம் நடக்க இரண்டு மாதங்களுக்கு முன்னர், பணம் விநியோகிக்கும் (cash collection officer) ஒருவரிடமிருந்து 226,000 டொலர்களைத் துப்பாக்கி முனையில் மஹ்மூத் தாஹா களாவாடியிருக்கிறார்.  அந்தப் பணத்தைக் கொண்டு போதைப் பொருள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகள் வாங்கியிருக்கிறார்.  இதனால் கவரப்பட்ட இந்த இரு இளைஞர்களும், மஹ்மூத் தாஹாவின் ஆசை வார்த்தைகளில் மயங்கியுள்ளனர்.

மெல்பேர்ண் புறநகர் Coburg என்ற இடத்தில், கொள்ளையிடச் சென்ற இவர்கள், மெல்பேர்ண் நகரில் நடத்திய கொள்ளை போல, இலகுவில் தப்பி விடலாம் என நினைத்திருந்திருக்கிறார்கள்.  ஆனால், அவர்கள் கொள்ளையிட முயன்ற கடைக்கு அருகிலுள்ள கடைக்காரர் மற்றும் பொது மக்கள் இவர்களைச் சுற்றி வளைக்க, மஹ்மூத் தாஹா தப்பி ஓடிவிட்டார்.  மற்றைய இருவரும் மாட்டிக் கொண்டனர்.  காவல்துறையினர் அங்கு வரும் வரையில், மற்ற இருவரையும் பொது மக்கள் கட்டி வைத்துள்ளார்கள்.  ஒருவரின் கைகளில் இருந்து, களாவாடப்பட்ட ஒரு லட்சம் டொலருக்கும் அதிக பெறுமதியான நகை கைப்பற்றப்பட்டது.

இவர்கள் நடத்திய கொள்ளையில் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் தாம் மன உழைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.  சிரியா நாட்டிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ள ஒருவர், தான் அலெப்போவில் அனுபவித்ததை ஆஸ்திரேலியாவிலும் அனுபவிக்க வேண்டி வந்து விட்டதே என்று அங்கலாய்த்துள்ளார்.

ஐந்து ஆண்டுகள் 9 மாத கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள , மஹ்மூத் தாஹா ஏற்கனவே 465 நாட்கள் சிறையிலிருந்துள்ளார்.  அவர் மூன்று வருடங்கள் சிறைவாசம் செய்ததன் பின்னர், நன்னடத்தை காரணமாக விடுதலை செய்யப்படும் (parole) வாய்ப்பிருக்கிறது என்று தண்டனை விதித்த நீதிபதி கூறியுள்ளார்.

 

 

 

 


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now