மெல்பனில் உளவள சிகிச்சை பெறுவதற்காக தன்னிடம் வந்த பெண்ணின் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்தினார் என்று கூறப்படும் இந்திய மனநல மருத்துவர் நீதிமன்றில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, இவர் மீது தனது கடுமையான கண்டனங்களை முன்வைத்த நீதிபதி இம்மாத இறுதியில் தண்டனைக்கான நாள் குறித்து அனுப்பியிருக்கிறார்.
சுமார் மூன்று வருடங்களாக இழுபறிப்பட்டுவந்த இந்த வழக்கில் கடந்த வாரம் குறிப்பிட்ட மருத்துவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து கிட்டத்தட்ட இந்த வழக்கு முடிவுக்கு வந்திருக்கிறது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படுகின்ற பெண் மன அழுத்த நோய் தொடர்பில் சிகிச்சை பெறுவதற்காக 2011 ஆம் ஆண்டு குறிப்பிட்ட இந்திய மருத்துவரிடம் சென்றிருக்கிறார்.
தொடர்ச்சியாக நடைபெற்ற மருத்துவ நோக்கம் கொண்ட சந்திப்புக்களில் அந்தப் பெண்ணிடம் தகாத கேள்விகளை கேட்டும், தகாத இடங்களில் தொட்டும் குறிப்பிட்ட மருத்துவர் பாலியல் ரீதியான தாக்குதல்களை மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே மனதளவில் பாதிக்கப்பட்ட இந்தப்பெண் பாலியல் ரீதியான தாக்குதலினால் இன்னும் விரக்தியடைந்து 2015 ஆம் ஆண்டு தற்கொலைக்கும் முயன்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இவரது முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டு விசாரணைகளை நடத்தி குறிப்பிட்ட மருத்துவரை நீதிமன்றின் முன்னால் நிறுத்திய பொலீஸார் கடந்த மூன்று வருடங்களாக இந்த வழக்கினை நடத்திவந்தனர்.
மெல்பனின் வட பகுதியில் தனது வைத்தியசாலையை நடத்தியவந்த மருத்துவர் இந்த வழக்கு நடைபெற்றுவந்தபோதே, தனது மருத்துவ தொழிற்சான்றிதழை மீளளித்திருந்தார். இந்நிலையில் இம்மாத இறுதியில் இவருக்கான தண்டனையை நீதிபதி அறிவிக்கவுள்ளார்.
